33% மகளிர் இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு 7% உள்ஒதுக்கீடு வேண்டும்
திருநெல்வேலி,ஏப்.4
மகளிர் இடஒதுக்கீட்டில், முஸ்லிம் பெண்களுக்கு 7 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நிருபர்களுக்கு பேட்டியளித்த, அவர் மேலும் கூறியதாவது:
பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் உள்ள இரு திராவிடக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதை கண்டிக்கிறோம். அதேவேளையில் லாலுபிரசாத், முலாயம்சிங் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
நாங்கள் இக் கருத்தை வரவேற்று, ஆதரிக்கிறோம். அரசின் மேல்மட்டத்தில் பிரதிநிதித்துவத்தை முஸ்லிம்கள் இழந்து வருகின்றனர். இவ் வேளையில் இந்த இடஒதுக்கீட்டால் மேலும் பிரதிநிதித்துவத்தை முஸ்லிம்கள் இழக்க நேரிடும்.
எனவே, மகளிர் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு உள் இடஒதுக்கீடு வேண்டும் என கூறி வருகிறோம். இதில் முஸ்லிம்களுக்கு மட்டும் 7 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கையாகும்.
இதை வலியுறுத்தி லாலுபிரசாத், முலாயம்சிங் கலந்து கொள்ளும் பிரமாண்டமான நிகழ்ச்சியை இம் மாதம் இறுதியிலோ, மே முதல் வாரத்திலோ சென்னையில் நடத்த திட்டமிட்டு வருகிறோம்.
2004 மக்களவைத் தேர்தலின்போது காங்கிரஸ் கூட்டணி கட்சியினர், குறைந்தபட்ச செயல்திட்டத்தில் மதத்தால் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தனர். ஆனால், அந்த இட ஒதுக்கீட்டை இன்று வரை வழங்கவில்லை. இதேபோல ரங்கநாத்மிஸ்ரா பரிந்துரைகளையும் இந்த அரசு இன்னும் செயல்படுத்தவில்லை. சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு, ரங்கநாத்மிஸ்ரா பரிந்துரைகளை மத்திய அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
கட்டாய கல்வி சட்டமாக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். ஆனால் அவற்றில் சில குறைபாடுகள் உள்ளன, அவற்றை அரசு நிவர்த்தி செய்ய வேண்டும். குறிப்பாக 18 வயது வரை அனைவருக்கும் கட்டாய கல்வி அளிக்க வேண்டும் என ஐ.நா. கூறுகிறது. ஆனால் அச் சட்டத்தில் 14 வயது வரைதான் கட்டாய கல்வி அளிக்கப்படும் என கூறப்படுகிறது. எனவே, இக் குறைபாடுகளை அரசு தீர்க்க வேண்டும்.
சமச்சீர் கல்விக் கோட்பாட்டில், சிறுபான்மையினரின் உருது, அரபி போன்ற மொழிகளின் எதிர்காலம் குறித்து எந்த தகவலும் இல்லை. அந்த மொழியை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் வழிக்கல்வியை ஊக்குவிக்க மானியம் வழங்கப்பட வேண்டும். இம் மானியத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.150 கோடி வழங்கினாலே தமிழ் வழி பள்ளிகள் மேம்படும்.
தமிழக அரசு 3 மணி நேரம் மின்தடையை அறிவித்து, இப்போது பல மணி நேரம் மின்தடை செயல்படுத்தி வருகிறது.
இவ்வரசு மின் மேலாண்மையில் தோல்வியடைந்து விட்டதையே இது காட்டுகிறது. மக்களின் மீது அக்கறையில்லாததால் அரசு மின்தடையை திணித்து வருகிறது.
செந்தூர் விரைவு ரயிலை தினசரி இயக்க வேண்டும். இதற்காக பயணிகள் நலச்சங்கத்தின் சார்பில் திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி வரை நடைபெறும் நடைபயண போராட்டத்தில் எங்களது அமைப்பினர் பங்கேற்பார்கள். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றார் ஜவாஹிருல்லா.
பேட்டியின்போது அவருடன் தமுமுக மாவட்டத் தலைவர் மைதீன்பாரூக், மாவட்டச் செயலர் ஐ.உஸ்மான்கான், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் மைதீன்சேட்கான், பொருளாளர் ரசூல்மைதீன், தமுமுக முன்னாள் மாவட்டத் தலைவர் மில்லத் இஸ்மாயில் ஆகியோர் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக