நம்பினால் நம்புங்கள்; காவி என்றால் அமைதியாம்.....!!?
கொலை செய்வது பெரும்பாவம்; அத்தகைய கொலையையும் செய்துவிட்டு அதை அடுத்தவன் மீது சுமத்துவது அதைவிட பெருபாவம். இந்த இரண்டாம் வகையை சேர்ந்தவர்கள் தான் இந்துத்துவாக்கள். நாட்டின் பல பகுதிகளில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றி விட்டு, 'இந்தப் பூனையும் பால் குடிக்குமா..?' என்ற ரீதியில் அப்பாவியான முகத்தோடு வலம்வருவார்கள்.
காவல்துறையோ வழக்கம்போல நடந்த பயங்கரவாத செயலுக்கு லஸ்கர் தொடங்கி, இருக்கிறதா இல்லையா என சந்தேகத்திற்கு இடமான அல் கொய்தா வரைக்கும் முடிச்சுப் போட்டு சில முஸ்லிம்களை உள்ளே போட்டு 'பைலை' மூடிவிடுவார்கள். மீண்டும் இந்துத்துவாக்கள் அடுத்த இடத்தில் தங்களின் 'சேவை'யை தொடங்கிவிடுவார்கள். இப்படித்தான் இருந்தது மாலேகான் விசாரணை வரைக்கும்; மாவீரன் கர்கரே மனச்சாட்சியோடு விசாரணை நடத்தியதில்தான் மாலேகான் மட்டுமல்ல; நாட்டில் நடைபெற்ற பல்வேறு குண்டுவெடிப்புகளில் காவிகளின் கோரமுகம் பளிச்சிட்டது.
இந்நிலையில், பல்வேறு குண்டுவெடிப்புகள் குறித்து பாராளுமன்றத்தில் உரைநிகழ்த்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், பல்வேறு குண்டுவெடிப்புகளில் புதுவகையான காவி பயங்கரவாதம் சம்மந்தப்பட்டுள்ளது என்று பேசினார். பொறுக்குமா அமைதி நேசர்களான[!] காவிகளுக்கு, சிதம்பரம் மன்னிப்புக் கேட்க வேண்டும்! எனக் கூச்சலிட்டு இறுதியில் வெளிநடப்பு செய்தது சிவசேனா. மேலும் இந்துக்களின் நாட்டில் ஒரு இந்து எப்படி தீவிரவாதியாக இருக்கமுடியும் என்றும் அறிவுப் பூர்வமாக[!] கேள்வியும் எழுப்பியுள்ளது சிவசேனா.
என்னய்யா! இந்தியா இந்துக்கள் நாடா..? வரலாறை புரட்டுவோமா..? சுதந்திரத்திற்காக வெள்ளையர்களோடு வீரவாள் கொண்டு மோதியது யார்..? 'வெண்சாமரம்' வீசி சுகபோகம் கண்டது யார்..? பேசுவோமா..?
மேலும் சிதம்பரத்தின் பேச்சை கண்டித்துப் பேசிய முரளிமனோகர் ஜோஷி, 'காவி என்றால் அமைதியின் சின்னம்' என்று காமெடி செய்துள்ளார். அதோடு, இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்தினால் அதற்கேற்ற விளைவுகள் ஏற்படும் என்றும் மிரட்டியுள்ளார். அதாவது 'விளைவுகள்' என்பதற்கு அர்த்தம் உள்துறை அமைச்சருக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறோம். பாராளுமன்றத்திலேயே இவ்வாறு பேசுபவர்களுக்கு வெளியில் பேசுவதற்கு சொல்லவா வேண்டும்..? புதிய வகை காவி பயங்கரவாதம் என்று சிதம்பரம் சொன்னால், அதற்கேற்ப விளைவுகள் ஏற்படும் என்று மிரட்டுபவர்கள், 'முஸ்லிம் பயங்கரவாதம்' , 'இஸ்லாமிய பயங்கரவாதம்' என்று வாய்ப்பாடாக ஒப்பித்தார்களே அப்போது முஸ்லிம்களுக்கும் இப்படித்தானே வலித்திருக்கும்..?
எனவே இந்த காவிகளின் வெற்றுக் கூச்சலையும், வெளிநடப்புகளையும் கண்டுகொள்ளாமல், நாட்டில் நடைபெற்ற அத்தனை பயங்கரவாத செயல்களையும், அது தொடர்பான வழக்குகளையும் திறந்த மனதோடு விசாரணை செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். குற்றவாளிகள் எவர்களாக இருந்தாலும், எவ்வளவு பெரிய கூட்டமாக இருந்தாலும் தண்டிக்க முன்வர வேண்டும்.அப்போதுதான் தீவிரவாதம் முற்றிலுமாக துடைக்கப்படும்.
எனவே சிதம்பரம் அவர்களால் கண்டறியப்பட்டுள்ள 'காவி பயங்கரவாதத்தை' துடைத்தெறிந்து மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளிக்கவேண்டிய பொறுப்பு உள்துறை அமைச்சருக்கு உண்டு என்பதை வலியுறுத்திக் கூறிக்கொள்கிறோம்.
ஆக்கம் : முகவை அப்பாஸ், குவைத்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக