அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

புதன், 1 செப்டம்பர், 2010

சூடுபிடிக்கும் அரசியல் களம் - நாம் செய்யவேண்டியது என்ன?

தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டன. கோடநாடு பங்களாவில் நீண்ட நெடு துயிலில் இருந்த ஜெயலலிதா, போயஸ் தோட்டத்திற்கு இடம் பெயர்ந்து நாளொரு அறிக்கையும், பொழுதொரு போராட்ட அறிவிப்பும் செய்துவருகிறார். மூவேந்தர் முன்னேற்ற கழகம், புதிய தமிழகம், மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகளை தன் தலைமையிலான கூட்டணியில் உறுதி செய்துகொண்ட அவர்,காங்கிரசையும் கூட்டணிக்குள் கொண்டு வர தீவிரமாக காய்களை நகர்திவருவதாக பேசப்படுகிறது.

இரண்டாயிரத்தி ஆறு சட்டமன்ற தேர்தலிலும், அதை தொடர்ந்து வந்த நாடாளுமன்ற தேர்தலிலும் ஜெயாவை கடுமையாக விமர்சித்தது மட்டும் அல்லாமல், அவரின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்த தமுமுக- மமகவை கூட்டணியில் அம்மையார் இழுத்து போட்டதை அதிமுக தொண்டர்கள் கொண்டாடிவருகிறார்கள்.

இரண்டாயிரத்தி ஆறு சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிக்கு சுழன்று சுழன்று பிரச்சாரம் செய்தது தமுமுக. அப்போது திருவாரூரில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய கருணாநிதி, "தாம் எங்கு பிரச்சாரத்திற்கு சென்றாலும் அங்கெல்லாம் (திமு) கழக கொடிகளுக்கு நிகராக தமுமுக கொடிகளை காண்பதாக" கூறினார். அந்த அளவிற்கு தமுமுக, திமுக வெற்றிக்காக உழைத்தது.

காலங்கள் ஓடின, காட்சிகளும் மாறின... தமுமுக தனது அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சியை இரண்டாயிரத்தி ஒன்பதாமாண்டு பிப்ரவரி திங்கள் ஏழாம் நாள், தாம்பரத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் கூடிய மாநாட்டுடன் தொடங்கியது. இஸ்லாமிய சிறுபான்மை சமுதாயம் அரசியல் அரங்கில் சுய முகத்தோடு, தன் மானத்தோடு எழுச்சியுடன் பிரதிநிதித்துவம் பெற தொடங்குவதை கண்ட ஆளும் வர்க்கம் அதிர்ச்சி அடைந்தது. எதற்கும் அடிபணிந்திராத மமகவை தனிமை படுத்தும் அத்தனை வேலைகளிலும் இறங்கியது.

தொடங்கி மூன்று மாதங்களேயான மமக இரண்டாயிரத்தி ஒன்பது நாடாளு மன்ற தேர்தலில் மயிலாடுதுறை, மத்திய சென்னை, பொள்ளாச்சி மற்றும் ராமநாதபுரம் ஆகிய நான்கு தொகுதிகளில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்ததோடு வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர். மக்கள் மத்தியில் மமக வேட்பாளர்களுக்கு ஏற்பட்ட எழுச்சியை கண்டு ஆடிப்போன மைனாரிட்டி திமுக அரசு, தனது அராஜக போக்காலும், மக்கள் வரிப்பணத்தில் இருந்து கொள்ளை அடித்த பணத்தாலும் மமகவை கொல்லை புறத்தில் வெற்றி கொண்டது. இந்நிலையில் அதிமுகவின் தொடர் அழைப்பை ஏற்று ஜெயாவை சந்தித்த மமக நிர்வாகிகள் - கூட்டணியை உறுதி செய்ததும் அதிமுக தொண்டர்கள் வெற்றி மகிழ்ச்சியில் திளைக்க தொடங்கினர்.

இது ஒருபுறம் இருக்க சாதனை(?) செய்கிறோம் என மார்தட்டி கொள்ளும் திமுக அரசு ஜெயாவின் அறிக்கைக்கு பதில் சொல்வதாக நாகரீகமின்றி பதில் பதில் கொடுக்கிறது. இத்தனை ஆண்டு காலங்களாய் தூங்கி கொண்டிருந்த ஜெயாவின் வழக்கிற்கு புத்துயிர் கொடுத்து முடக்கி விடும் வேளையில் இறங்கியது. தீர்ப்பை துரிதப்படுத்த ஸ்டாலின் தலைமையில் ஆளும்கட்சியால் போராட்டம் நடத்தப்படுகிறது. தேர்தல் பயத்தில் பூரண மதுவிலக்கு பற்றி பேசப்படுகிறது. சமூக விரோத குற்றச்செயல்கள் குக்கிராமங்களில் கூட தடுத்து நிறுத்தப்படுவதாக திமுக சார்பு செய்தி ஊடகங்கள் கூக்குரலிடுகின்றன.

அறுபது கோடி சொத்து குவிப்பு வழக்கில் ஜெயாவை நாம் நேர்மையானவர் என்று சொல்லவில்லை - அதே நேரத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழல் பல ஆயிரம் கோடி என பேசப்படுகிறது. இதை பார்க்கும் போது அறுபது கோடி என்பது திமுக அராஜக கூட்டம் ஒரு தொகுதிக்கு செய்யும் செலவை விட மிகக்குறைவு என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

திமுகவை விட்டால் காங்கிரசிற்கு வேறு மாற்று வழி இருக்கிறது, ஆனால் காங்கிரசை விட்டால் திமுகவிற்கு வேறு வழி இல்லை என்பதை நன்கு புரிந்து கொண்ட இளங்கோவன், ஒரு ருபாய் அரிசி, மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆகியன மத்திய அரசின் நிதி உதவியால் நடைப்பெருவதாக சொல்லி பதில் அறிக்கை வரவழைக்க செக் வைக்கிறார். அதற்கு நேரடியாக பதில் சொல்ல திராணியற்ற கருணாநிதி "வலு" என்றும் "வலி" என்றும் பிதற்றுகிறார்.

இந்த தேர்தலில் காங்கிரஸ் திமுகவுக்கு ஆதரவு கொடுத்து அந்த அணி வெற்றி பெற்றால் ஸ்டாலின் முதல்வராவார். இது காங்கிரஸ் ஸ்டாலினை வளர்த்துவிடுவதாக ஆவதோடு, அவர்களின் நாற்பதாண்டு கால கனவான காமராஜர் ஆட்சி தமிழகத்தில் மலர்ந்திட ஏற்படும் வாய்ப்பை அவர்களே நசுக்குவதாக ஆகிவிடும். அதிமுகவுடனோ அல்லது விஜயகாந்துடனோ கூட்டணி சேர்ந்தால், அவர்களே நினைத்தாலும் அதிமுகவிலேயோ(?) , தேமுதிகவிலேயோ இரண்டாம் கட்ட தலைவர்களை வளர்க்க முடியாது. அதோடு, சமீபத்தில் திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு தர தயாராக இருப்பதாக ஜெயா மறைமுகமாக கூறியதை காங்கிரஸ் பயன்படுத்திக்கொள்ள திட்டம் வகுக்க வேண்டும்.

கடந்த தேர்தல்களில் முஸ்லிம் மற்றும் இதர சிறுபான்மை மக்கள் நெஞ்சிலும், முதுகிலும் மாறி மாறி குத்துபட்டதால், தற்போது அவர்களுக்கு மத்தியில் ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டு, வழக்கமாக அவர்களிடம் இருக்கும் தாழ்வு மனப்பான்மை, சுயபலம் உணராமை, சுயஉரிமை கோராமை, சுய உணர்வின் புரியாமை, அறியாமை ஆகிய பல "மை" களிலுருந்து விடுபட்டு புத்துயிர் பெற்று இருப்பதாக தோன்றுகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் சில லட்டர் பேட் கட்சிகளை தவிர தமுமுக, பி.எப்.ஐ, ததஜ, இதஜ போன்ற வெகுஜன இயக்கங்கள் சமுதாய நலன் கருதி ஒன்றுகூட வேண்டும்...

நாம் ஒன்றுபட்டால் மேலப்பாளையம், அரவாக்குறுச்சி, வாணியம்பாடி, ராமநாதபுரம், திருச்சி, கோவை மேற்கு, மத்திய மதுரை, சேலம், கூடலூர்-நீலகிரி, தஞ்சை, பாபநாசம், பூம்புகார், காட்டுமன்னார்கோயில், சென்னையில் - சேப்பாக்கம், ராயபுரம், ஆயிரம் விளக்கு, துறைமுகம், திருவல்லிக்கேணி,திருவாரூர்,பட்டுக்கோட்டை,அறந்தாங்கி போன்ற (குறைந்தது) நாற்பது தொகுதிகளில் முஸ்லிம் ஆதரவுள்ள வேட்பாளர் தான் வெற்றிபெற முடியும்.

நம் பலத்தை நாம் அறிந்திட விடாமல், ஆளும் வர்க்கம் பிரித்தாளும் சதியில் ஈடுபடுகிறது. சதியை முறியடித்து, ஒன்றுபட்டு, பலத்தை காட்டி நாம் அரசியலில் பிரதிநிதித்துவம் பெறுவது நமது தற்போதைய அவசர தேவை...

ஒன்றுபடுவோமா???

-- ஆக்கம் நசீருத்தீன்

1 கருத்து: