கருணாநிதியிடம் ஏமாந்த ராஜபக்சே: ஜெயலலிதா
இலங்கைக்குச் சென்றுள்ள நாடாளுமன்றக்குழு, இந்திய அரசின் அதிகாரப்பூர்வக் குழு என்று நினைத்து இலங்கை அதிபர் ராஜபக்சே தமிழக முதலமைச்சர் கருணாநிதியிடம் ஏமாந்து இருக்கிறார் என அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கைக்குச் சென்றுள்ள நாடாளுமன்றக்குழு அனைத்துக் கட்சிக் குழு அல்ல என்பதால்தான் அதில் சேர்ந்துகொள்ள எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு அளிக்கப்படவில்லை என்பதை முரசொலி கேள்வி-பதில் அறிக்கை மூலம் முதலமைச்சர் கருணாநிதி ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்தக் குழு இந்திய அரசின் அதிகாரப்பூர்வ குழு என்று நினைத்து இலங்கை அதிபர் ராஜபக்சே ஏமாந்து இருக்கிறார்.
இலங்கை சென்றுள்ள 10 அரசியல்வாதிகளின் சுற்றுப்பயண முடிவு எப்படி இருக்கும் என்பதை எளிதில் யூகித்துக் கொள்ள முடியும். இலங்கை அரசின் அடக்குமுறை எந்த தமிழர் பகுதியில் மிகக் குறைவாக இருப்பதாக தோற்றம் அளிக்கிறதோ, அங்கு தான் இந்தக் குழுவினர் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
ராஜபக்சேவின் சிங்களப் பெரும்பான்மை அரசால் தேர்வு செய்யப்படும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களிடம் மட்டுமே அவர்கள் கலந்துரையாட முடியும். இலங்கை அரசின் பாதுகாப்பிற்குட்பட்ட ஏதாவது ஒரு முகாமில் உள்ள, அரசால் அச்சுறுத்தப்பட்ட சில தமிழர்களை இந்தக் குழுவினர் பேட்டி காண ஏற்பாடு செய்யப்படும்.
இந்தக் குழு திரும்பி வந்தவுடன் கருணாநிதியிடம் தன்னுடைய அறிக்கையை சமர்ப்பிக்கும். இலங்கை அரசு கிட்டத்தட்ட நான்கு லட்சம் இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு மறுவாழ்வு அணிக்கும் பணியை மனப்பூர்வமாக செய்ய முயற்சித்து வருவதாக இந்தக் குழு தெரிவிக்கும். சில குறைபாடுகள் இருக்கின்றன என்றும், மிகப் பெரிய பிரச்சினையை கையாளும் போது இது போன்ற குறைபாடுகள் ஏற்படுவது சகஜம் தான் என்றும் இந்தக் குழுவினர் ஒப்புக் கொள்வார்கள். தன்னால் எந்த அளவுக்குச் சிறப்பாகச் செய்ய முடியுமோ அதைச் செய்வதாக ராஜபக்சே உறுதி அளித்ததாகவும், கருணாநிதியின் நிர்வாகத் திறமையையும், தொலைநோக்குப் பார்வையையும் ராஜபக்சே புகழ்ந்ததாகவும் தெரிவிப்பார்கள்.
இதன் மூலம், ஒட்டுமொத்தத் தமிழினத்தை ஏமாற்றிவிடலாம் என்று நம்புகிறார்கள்.
ஆனால், தமிழர்களின் ஐம்பது ஆண்டு கால சுய நிர்ணயப் போராட்டம் என்னவாகும்? ‘சிங்களர்கள் மட்டும் என்ற கொள்கை மற்றும் தங்கள் சொந்த மண்ணிலேயே தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக ஆக்கப்பட்ட கேடு விளைவிக்கக் கூடிய முறையான தரப்படுத்துதல் ஆகியவை என்னவாகும்? இதனை வருங்கால தலைமுறையினரும் மன்னிக்க மாட்டார்கள், தமிழர் உரிமைக்காக தங்கள் உயிரை ஈந்தவர்களின் ஆன்மாக்களும் மன்னிக்காது.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக