அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

புதன், 11 நவம்பர், 2009

வந்தே மாதரம் பாடலை ஏற்க முடியாது! ஜமாத்தே உலமாயே ஹிந்த் முடிவால் நொந்துபோன காவி முகாம்



ஜமாஅத்தே உலமாயே ஹிந்த் என்ற மார்க்க அறிஞர் சபையினரால் தேவ்பந்த்தில் நடத்தப்பட்ட 30வது மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்தை வைத்து பரபரப்பு தீயைப் பற்றவைக்க பிரிவினைவாத சக்திகள் முயன்றன.
வந்தே மாதரம் என்ற சர்ச்சைக்குரிய பாடல் இஸ்லாமிய நெறிகளுக்கு முரணானது. ஒரு குறிப்பிட்ட சமயத்தின் வழிபாட்டு முறைப்படி அமைந்த பாடலை நாட்டு மக்கள் அனைவரும் பாடும்படி கட்டாயப்படுத்துவது சரியல்ல; உள்நோக் கத்தோடு ஒருவர் எழுதிய நாடகத்தின் பாடலை தேசப்பற்று பாடலாக எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? என மேற்கண்ட விழாவில் கூறப்பட்டது.
இந்தக் கருத்துக்கு நாடு முழுவதும் பலத்த சர்ச்சைகளும் விமர்சனங்களும் எழுந்தன. தேசப்பற்று என்ற உணர்ச்சி மிகுந்த துருப்புச் சீட்டை வைத்து சில சக்திகள் ஆடிய விபரீத விளையாட்டைக் கண்டு நடுநிலையாளர்கள் நமக்கேன் வம்பு? என அமைதி காத்தனர். மவுன சாட்சியாளர்களாக இருந்ததால் விரல்விட்டு எண்ணக்கூடிய சக்திகள் வந்தே மாதர ஆட்டத்தை சளைக்காமல் ஆடினர்.ஜன கண மன... என்ற வங்காள மொழிப் பாடலுக்கும், சாரே ஜஹான்சே அச்சா... என்ற மயக்கும் மொழி யழகுடன் கூடிய மகாகவி இக்பாலின் கவிதைக்கும் இல்லாத முக்கியத்துவம் ஏன் வாசனையற்ற வறண்ட வந்தே மாதரத்துக்கு ஏன் வழங்கப்பட வேண் டும்? என கேள்வி பகுத்தறிவு உள்ள அனைவரின் நெஞ்சங்களிலும் எதிரொலித்தது.
நாட்டுப் பற்று பாடலுக்குரிய எந்த அர்த்தமும், பொருத்தமும் இல்லாத வந்தே மாதரத்துக்கு கால ஓட்டத்தில் எவ்வித முக்கியத்துவமும் இல்லாத அவலநிலை ஏற்பட்டு விடுமோ? என அஞ்சிய அதே சக்திகள் வந்தே மாதரத்தை பிரபலப்படுத்த பெரும் பெரும் முயற்சிகள் மேற்கொண்டனர்.
நாடு விடுதலைப்பெற்ற 50 ஆண்டு கொண்டாட்டத்திலும் சரி, அறுபதாண்டு கொண்டாட்டத்திலும் சரி, வந்தே மாதரம் பாடலுக்கு மட்டும் 'செம்மையான கவனிப்பு' கிடைத்தது.
ஏ.ஆர்.ரஹ்மான் என்பவர் வந்தே மாதரம் என ஓர் இசை ஆல்பத்தை தயாரித்தார். லதா மங்கேஷ்கரிலிருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் வரை சிறப்பு இசை தொகுப்புகளை வெளியிட்டனர். ஜன கண மன... மற்றும் ராணுவ அணிவகுப்பில் இசைக்கப்படும் சாரே ஜஹான்சே அச்சா ஆகிய பாடல்கள் திருவிழாவில் தொலைந்த குழந்தைகள் போல பரிதாப நிலையை அடைந்தன. இதன் பின்னணியில் உள்நோக்கம் கொண்ட கருத்தியல் கற்பிதம் இருந்தது உண்மை.
வந்தே மாதரத்துக்கு கொடுக்கப்படும் உள்நோக்கத்துடன் கூடிய முக்கியத்துவத் தைக் கண்டு அரசியல் கட்சிகள் அடக்கி வாசிக்கலாம். அரசுகள் கூட வந்தே மாதரத்தின் போலி பிரபலத்தைக் கண்டு அடங்கிப் போகலாம்.
ஆனால், உலகப்புகழ் பெற்ற தாருல் உலூம் தேவ்பந்த் மதரஸாவுக்கும், ஜமாஅத்தே உலமாயே ஹிந்த்திற்கும் வந்தே மாதரம் என்ற கற்பிதத்தை தூக்கிச் சுமக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை அல்லவா?

பல ஆண்டுகளுக்கு முன்பே வந்தே மாதரம் பாடலைப் பாடுவது இஸ்லாமிய நெறிக்கு முரணானது என தாருல் உலூம் தேவ்பந்த் அறிவித்தது. அந்த அறிவிப்பினை அடியொற்றி ஜமாஅத்தே உலமாயே ஹிந்த்தின் 30வது மாநாடு தனது தெளிவுரையை வழங்கியது.
'இந்திய தேசத்தை பெரிதும் நேசிக்கி றோம். ஆனால் தேசத்தை வணங்குகிறோம் என்ற பொருள் கொண்ட பாடலை ஏற்றுக்கொள்ள முடியாது'' லி என ஆணித்தரமாக அறிவித்தது தேவ் பந்த் மதரஸா. இவ்வாறே பல்வேறு அமைப்புகளும் தங்கள் கருத்தினை உரத்து முழங்கின.
இதில் உச்சநீதிமன்றத்தின் சரித்திர சிறப் புமிக்க ஓர் அறிவிப்பினை நினைவில் கொள்வது பொருத்தமாக இருக்கும்.வந்தே மாதரம் பாடுவது கட்டாயமல்ல என உச்சநீதிமன்றம் குழப்பவாதிகளின் குரலுக்கு பதிலடியை இடியென முழங்கியது.
வந்தே மாதர சர்ச்சை முடிந்துபோன ஒன்றாக நாடே கருதும் நிலையில்தான் சென்ற வாரம் தேவ்பந்த்தில் நடைபெற்ற ஜமாஅத்தே உலமாயே ஹிந்த்தின் சார்பில் நடைபெற்ற 30வது ஆண்டு விழாவில் பிரயோகிக்கப்பட்ட ஒரு வரியை மட்டும் வைத்து குதியாட்டம் போடத் தொடங்கின சில பிரிவினைவாத சக்திகள். சில இந்திய ஆங்கில ஊடகங்களும் வந்தே மாதர சர்ச்சையை ஊதிப்பெரிதாக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டன.
கடந்த ஆண்டு புகழ்பெற்ற மார்க்க நிறுவனமான தேவ்பந்த், தீவிரவாதத்திற்கு எதிராக ஒரு கண்டன பிரகடனத்தை வெளியிட்டது. பயங்கரவாதம் இன்று உலகை அச்சுறுத்தும் மிகப்பெரிய தீமையாக இருப்பினும் அதனை பகிரங்கமாக கண்டிக்கும் துணிவு பல்வேறு மத அமைப்புகளுக்கு இல்லாத நிலையே நிலவுகிறது.
ஹிந்துமத மடாலயங்கள், காவி பயங்கரவாதத்தை கண்டிப்பதில்லை. மேற்கத்திய சக்திகள் அமெரிக்க மற்றும் யூத பயங்கரவாதத்தை கண் டிக்காமல் இருப்பதோடு அத்தகைய பயங்கரவாதத்தை நியாயப்படுத்தும் வகையிலும் நடந்துகொண்டு வருவதைக் கண்டு நடுநிலையாளர்கள் அதிர்ச்சியும், வேதனையும் தெரிவித்துவரும் நிலையில் எல்லாவித பயங்கரவாதத்தையும் கண்டித்த தேவ்பந்த் பிரகடனத்தை பாராட்டவோ, ஏன் பிரபலப்படுத்தவோ வக்கில்லாத பிரி வினைவாத சக்திகள் வந்தே மாதரம் குறித்த சர்ச்சைகளில் அதீத ஆர்வம் காட்டுவது ஏன்? என்ற கேள்விகள் நாட்டிலுள்ள நல்லோர் மனதில் எழத் தொடங்கின. இந்நிலையில் வந்தே மாத ரத்தை வைத்து அரசியல் வாழ்வுக்கு புத்துயிர் ஊட்டலாம் என நினைத்த சக்தி களின் மனக்கனவில் மண் விழுந்தது.
வந்தே மாதரம் பாடல் ஏற்புடையதல்ல என ஜமாஅத்தே உலமாயே ஹிந்த் நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டதை வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்த பாஜக உள் ளிட்ட சங்கும்பல் முயன்றது. நிகழ்ச்சி யில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஹிந்து சமய ஆன்மீக வி.ஐ.பி. ராம்தேவ் இருவரையும் கண்டனம் செய்த ஹிந்துத்துவ சக்திகள் இந்த இருவரின் உருவ பொம்மைகளையும் தீயிட்டுக் கொளுத்த முயன்றனர். இருவரையும் மன்னிப்புக் கேட்டே தீரவேண்டும் என்றார் உ.பி.யின் பாஜக தலைவர் வினய் கட்டியார். மத்திய அமைச்சர் அவ்வாறு மன்னிப்பு கேட்காத பட்சத்தில் பிரதமர் தலையிட்டு சிதம்பரத்தை அமைச்சர் பதவியை விட்டு நீக்கவேண்டும் என கோரிக்கை விடுத்ததுதான் உச்சக்கட்ட காமெடி.
இதனிடையே மத்திய சிறுபான்மை மற்றும் கம்பெனி விவகாரங்களுக்கான அமைச்சர் சல்மான் குர்ஷித், வந்தே மாதரம் குறித்து கருத்து தெரிவித்த மார்க்க அறிஞர்களின் மீது பாய்ந்து பிறாண்டினார்.

இந்த நாட்டிற்கு தற்போது உள்ள பிரச்சினைகளே போதும்; இந்நிலையில் சிலர் மேலும் பிரச்சினைகளை உருவாக்கு வது ஏன்?'' என சல்மான் குர்ஷித் ஜமாஅத்தே உலமாயே ஹிந்த் குறித்து தெரிவித்த கருத்து முன்னணி மார்க்க அறிஞர்களின் கண்டனத்திற்கு இலக் காகியுள்ளது.
அமைச்சர் தனது அறியாமையை தனது கருத்தின் வாயிலாக வெளிப் படுத்தி இருக்கிறார்'' என தாருல் உலூம் வக்ஃபின் முக்கிய மார்க்க அறிஞர் முஹம்மது சலீம் காஸிமி தெரிவித்திருக்கிறார். 'சல்மான் குர்ஷித் ஒன்றும் மதத்தலைவர் அல்ல; நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் குறித்து அவர் கருத்து தெரிவிக்காமல் இருக்கட்டும் என அகில இந்திய அல்குர்ஆன் ஃபவுண்டேஷனின் முக்கியப் பிரமுகர் மவ்லவி நதீமுல் வாஜிதி தெரிவித்தார்.
காங்கிரஸின் ஃபரூக்காபாத் பகுதியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஷஹீத் மஹ்மூத்கான், அமைச்சர் சல்மான் குர்ஷிதை நோக்கி விடுத்த வினாக்கள் இந்திய அரசியல் அரங்கை அதிரவைத்தன. ஜவஹர் லால் நேருவும், மவ்லானா அபுல்கலாம் ஆஸாத்தும் வந்தே மாதரம் பாடினார்கள் எனக்கூறி எசகுபிசகாக மாட்டிக்கொண்ட அமைச்சர் சல்மான் குர்ஷிதை, ஷஹீத் மஹ்மூத்கான் ஆதாரப்பூர்வமான தகவல் களால் விளாசினார்.
காங்கிரஸில் இருந்த ஜனசங்கத்தின் செய்தித் தொடர்பாளராக மாறிப்போனாரா சல்மான்? 1937ல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் வந்தே மாதரம் பாடலின் முரண்பாடான, ஆட்சேபனைக்குரிய பகுதி கள் நீக்கப்பட்டன என்பது சல்மானுக்குத் தெரியுமா? அந்தப் பாடலின் எந்தப் பகுதி என்பதை சல்மான் குர்ஷிதால் சரியாக குறிப்பிட முடியுமா? என்ற சீறி எழுந்த வினா அலைகளால் வாயடைத்துப் போனது சல்மான் குர்ஷித் மட்டுமல்ல, சங் கூடாரமும்தான்.
மொத்தத்தில் பிசுபிசுத்துப் போனது வந்தே மாதரம் சர்ச்சை. இந்த சர்ச்சையை வைத்தாவது சிறிது காலம் அரசியல் செய்ய நினைத்த சங்கும்பல் நொந்து நூலாகிப் போனது. வந்தே மாதரம்... பாவம், தந்ததே ஏமாற்றம்!
--ஹபீபா பாலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக