அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

வியாழன், 25 பிப்ரவரி, 2010

டாஸ்மாக்கால் தள்ளாடும் தமிழகம்


சாராயக்கடைக் கடையும் வைத்திடலாம் & இங்கு
சன் மார்க்க சங்கமும் நடத்திடலாம்
யாரும் கேட்க மாட்டார்கள்

அது தான் பாரதப் பத்தினியம்-எழுச்சிக் கவிஞர் ஈரோடு தமிழன்பனின் வரிகள் இவை.


அண்மையில் திருவள்ளுவரின் பேரன்பரான கலைஞருக்கு உலகத் திருக்குறள் பேரவையின் விருது, திருக்குறள் நெறியை வளர்த்த தற்காக வழங்கப்பட்டது. வள்ளுவரின் கொள்கையோ மது எதிர்ப்பு.


குறளோவியம் தீட்டியக் கலைஞர் கள்ளுண்ணாமை அதிகாரத்தை அறியாதவரல்ல. அதிகாரத்தில் இருக்கும் போது அதை அவர் செயல்படுத்த தயங்குவது ஏன்-?கற்பனையாக வரையப்பட்டது தான் ஜடாமுடி தாடியுடன் கூடிய திருவள்ளுவரின் உருவம்.



திருவள்ளுவருக்கு முக்கடல் சங்க மிக்கும் குமரிமுனையில் 133 அடி உயரத்தில் பிராமண்டமான முறையில் மக்கள் வரிப்பணத்தில் சிலை அமைத்தார் கலைஞர். கற்பனைக்குக் கற்சிலை அமைத்தவர். வள்ளுவர் கற்பித்ததை காற்றில் பறக்க விடுவது முறையா?


சுனாமி தமிழகத்தை சூறையாடிய போதும் கூட, வள்ளுவர் சிலையை நினைத்து நெஞ்சு பதைத்தவர், வள்ளுவர் வலியுறுத்திய மது எதிர்ப்பை மறந்ததற்கு என்ன காரணம்.



அண்ணாவுடன் கருத்து வேறுபாட்டால், பெரியாரைப் பிரிந்து தி.மு.க.வைத் தொடங்கி ஆட்சிக் கட்டிலைக் கைப்பற்றிய பிறகு, திருச்சியில் தங்கியிருந்த தந்தை பெரியாரைத்தான் முதலில் சந்தித்தார். அண்ணாதுரையைத் தோற்கடியுங்கள் என்று கோபத்தில் கூறிய தந்தை பெரியாரிடம், இந்த ஆட்சியே உங்களுக்கு காணிக்கை என்றார். தி.மு.க.வை அண்ணா தொடங்கியவர் என்றாலும், தான் அதன் தலைவர் பொறுப்பை ஏற் காமல், தந்தை பெரியாருக்காவே அந்தப் பதவியைக் காலியாகவே வைத்திருந்தார் என்பார்கள்.



பெரியாரின் சமூகநீதிக் கொள்கைகளுக்கு சட்ட வடிவம் கொடுத்து அண்ணா ஆட்சி நடத் தினார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை நிறைவேற்ற முடியாத போது, பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளாக அதைக் கருதி, தான் ஆட்சியைக் கைப்பற்றியதும் தந்தையின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றித் தனயனாக மாறிய கலைஞர், பெரியாரின் சமூகக் கோட்பாடான மது ஒழிப்பை மறந்தது சரியா?



தென்னை மரத்திலிருந்து இறக்கப் படும் கள்ளால்தான் சமூகம் சீரழிகிறது என்பதால் தனக்குச் சொந்தமான பத்தாயிரம் தென்னை மரங்களை வெட்டிசாய்த்தவர் பெரியார். தென்னை மரத்தால் எண்ணற்ற நன்மைகள் விளைந்தாலும், கள் என்ற ஒரு தீமையைக் கருத்தில்கொண்டு, போதைக்கான எதிர்ப்பின் முழு வீச்சை வெளிப்படுத்திடும் வகையில் பெரியார் பத்தாயிரம் தென்னை மரங்களை வெட்டினார்.தன் மனைவி மற்றும் சகோதரியையும் மது ஒழிப்புப் போராட்டத்தில் முழு வீச்சில் களமிறக்கினார். மது ஒழிப்புப் போராட்டத்தை எப்போது முடிப்பீர்கள்? என்று மகாத்மா காந்தியடிகளிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அதை ஈரோட்டில் உள்ள இரு பெண்களிடம் (பெரியாரின் மனைவி நாகம்மையார் மற்றும் சகோதரி) கேட்டுதான் முடி வெடுக்க முடியும் என்று பதில் கூறுமளவுக்கு பெரியாரின் குடும்பமே மது ஒழிப்பில் உணர்வுப்பூர்வமாக இருந்தது.



சட்டமன்றப் பணியின் பொன்விழா உள்ளிட்ட முக்கியமானப் பாராட்டு விழாக்களின் போது, இவற்றை யெல்லாம் பார்த்து மகிழ என்னை ஆளாக்கிய பெரியாரும், அண்ணாவும் இல்லையே என வருந்தும் கலைஞர். பெரியாரின் சமூக இலட்சியத்திற்கு ஆற்றும் உதவி இதுதானா?முன்பெல்லாம் அரசாங்கம் கல்வி நிறுவனங்களை நடத்தியது. தனியார் சாராயக்கடைகளை நடத்தினர். இப்போது தனியார், கல்வி நிறுவனங்களை நடத்தி பகற்கொள்ளை அடிக்கின்றனர்.அரசாங்கமோ சாராயக் கடைகளை நடத்திக் கொண்டிருக்கிறது. தன் மான இயக்கம் கண்டதந்தை பெரியாரின் வழிவந்தக் ஆட்சியின் மாட்சி இதுதானா?



அரசுக்குப் பெரிய வருமானம் மதுவிற்பனையில் என்று புள்ளிவிவரம் கூறி புளங்காகிதம் அடைகின்றனர் ஆட்சியாளர்கள். ஒவ்வொரு தமிழ னின் மானம் போவது பற்றிய கவலை இல்லாமல், மது வருமானம் பற்றி மகிழ்ச்சி கொண்டாடுவது என்னே அவலம்.


ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும்
சாராயகங்கை காயாதடா?
குடித்தவன் போதையில் நிற்பான்
குடும்பத்தை வீதியில் வைப்பான்
தடுப்பவன் யாரென இங்கே
நீ கேளடா?
கள்ளுக்கடை காசுதாண்டா
கட்சிக்கொடி ஏறுது போடா?
என்று ‘உன்னால் முடியும் தம்பி’ படத்தில் பாட்டெழுதினார் புலவர் புலமைப்பித்தன்.


கள்ளுக்கடை காசில் கட்சிக்கொடி ஏறிய காட்சிசற்றே வளர்ந்து ‘தேறல்‘ (மது) விற்ற வருமானத்தில் தான் தேசியக் கொடியே ஏறுவதாக பெருமைப்படுகிறது (?) அரசாங்கம்.வருமானம் தான் முக்கியமென்றால் மதுவால்மட்டுமல்ல, இழிச்செயல்கள் எல்லாவற்றின் மூலமாகவும் வளமான வருவாய் வரவே செய்யும், கொலை, கொள்ளை போன்ற குற்றங்களை கொடியவர்கள் செய்வதன் நோக்கம் என்ன? வருமானம் தானோ, அரசாங்கம் ஒரு கொடுமையைச் செய்து கொண்டு அதன் மூலம் கிடைக்கின்ற வருமானத்தைக் கூறி, செயலை நியாயப்படுத்தினால், தனி மனிதர்களும் அதேபோல நடப்பதற்கு தார்மீக உரிமை வந்து விடாதா?


‘கோன் எவ்வழி, குடி அவ்வழி’ என்பதையே அறியாதவர்களா ஆட்சியாளர்கள்.


‘சங்கத்தமிழ்’ வரைந்த எழுதுகோல் ஏந்திய கலைஞர் இன்று செங்கோலை வைத்துள்ளார்.
‘கடுஞ்சினத்தக் கொல்களிரும்
கதழ்பரியக் கலிமாவும்
நெடுங்கொடிய நிமிர்தேரும்,
நெஞ்சுடையப் புகழ் மறவரும் என
நான்குடன் மாண்ட தாயினும் ஆண்ட
அறநெறி முதற்றே அரசின் கொற்றம்’
என்கிறது புறநானுறு.


அரசாங்கத்திற்கு என்ன அறநெறி இருக்கிறது. குடிபோதை வளர்த்து “அறநெறிகளின் கழுத்தைநெறி” என்ற நிலைதான் இருக்கிறது.திருக்குவளை அருகேயுள்ள பையூரைச் சேர்ந்த பாநலவேந்தன் என்ற கவிஞர், “அவனது போதையில் அவன் குடும்பமே தள்ளாடியது” என்று எழுதியுள்ளார்.மதுக்குவளையின் ஆபத்து திருக் குவளைத் தமிழுக்குத் தெரியாமலா இருக்கிறது.



தந்தையைக் கொன்ற மகன், மனைவியைக் கொன்ற கணவன், பிள்ளைகளைக் கொன்ற அப்பன் என நெஞ்சு நடுங்கும் செய்திகள் நித்தமும் வளர்வதற்கு, சாராயம் தான் கார ணம் என்று அரசு அறியாமலா இருக்கிறது. வாகன விபத்துக்கள் பெருகுவதற்கு, டாஸ்மாக்குகள் பெருகியது தான் காரணம் என அரசுக்குத் தெரியாதா?



கொடுமைகளின் ஊற்றுக் கண் ணாகிய குடிபோதையை அடியோடு ஒழிக்க அரசு தயங்குவது ஏன்? தள் ளாடுவது ஏன்?


இந்திய அரசியலின் மூத்த தலை வர் என்ற மதிப்பிற்குரிய கலைஞர், இலக்கியங்களைப் படிக்கிற, படைக் கிற முக்கிய இலக்கிய வாதியும் கூட. மனிதகுலத்திற்கு இலக்கை இயம்புவதுதான் இலக்கியம் என்கிறார்கள்.மனிதகுலத்துக்கு இலக்கை இயம்பும் இலக்கியத்தைப் போற்றுகிற உள்ளம், மது விற்பனையின் இலக்கு களைப் பெருமையாக வெளியிடுவது பீடன்று.



பழங்காலத்தில் மன்னர்களைப் புகழ்ந்து பாடுகிற புலவர்கள், மன்னரின் தவறுகளை சுட்டிக் காட்டி திருத்தியுள்ளனர்.ஆட்சியின் கொள்கைத் திட்டங் களையே அன்று புலவர்கள் வகுத்துள்ளனர். இன்று கலை ஞரைச் சூழ்ந்திருக்கும் தமிழ்ப் பேரறிஞர்களோ?

பனைமர ஓலைகளிலேயே
கள்ளுண்ணாமையை எழுதிய
வள்ளுவரின் நெறியைப் போற்றி
நுங்கம்பாக்கத்தில் கோட்டம்
-அமைத்த கலைஞர் குறள் நெறியைப் போற்றுவது உண்மையென்றால் மதுக் கடைகளை இழுத்து மூட முன்வர வேண்டும்.

தமிழா மதுவை எதிர்த்து போராட வா!!

தமிழகத்தை குடிபோதையில் இருந்து மீட்க தமிழ்நாட்டில் பூரணமதுவிலக்கு வேண்டும் என்பதை வலியுறுத்தி தமுமுகவின் மனிதநேய மக்கள் கட்சி தமிழகம் தழுவிய மது கடை மறியல் போரை நடத்த இருக்கிறது. சமுதாய சொந்தங்களே,மாற்றமத சகோதரர்களே வேண்டாம் தமிழகத்தில் மதுகடைகள் என்பதை ஆட்சியில் இருக்கும் கருணாநிதிக்கு வலியுறுத்த அணிதிரண்டு வாரீர்.

போரட்டத்தின் கோஷங்கள்


அழைக்கிறது...
மனிதநேய மக்கள் கட்சி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக