அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

செவ்வாய், 23 மார்ச், 2010

நெஞ்சுக்கு (அ)நீதி

நீர் தீர்ப்பளித்தால் அவர்களிடையே நீதியான முறையில் தீர்ப்பளிப்பீராக! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். (திருக்குர்ஆன் 5:42).





"சமூக நீதி" திராவிட இயக்க மேடைகளிலும் திராவிட சித்தாந்தம் சார்ந்த கட்சி மேடைகளிலும் உணர்ச்சிப் பெருக்கோடு உரக்க உச்சரிக்கப்படும் வாசகம். இன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி தன்னுடைய ஆட்சியின் சாதனைகள் என்று சிலவற்றை பட்டியலிடும் போது தவறாமல் அவருடைய அறிக்கையில் இடம் பிடிக்கும் சொல். அன்றைய மேட்டுக்குடி ஜமீன்தார்களின் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியிடமிருந்து தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை தட்டிப் பறிக்க திமுக பயன்படுத்திய மாயாஜால வார்த்தை.


சமூக நீதியை கட்டி எழுப்புவோம் என்ற வாக்குறுதியை கொடுத்த (இன்னும் கொடுத்துக் கொண்டிருக்கின்ற) திராவிட சித்தாந்தம் சார்ந்த கட்சிகள் தமிழ் நாட்டை ஆள ஆரம்பித்து நாற்பது வருடங்களுக்கும் மேலாகி விட்டது. ஆனால் சமநீதியை எல்லா சமூகங்களும் அடைந்து விட்டனவா என்று நாம் எண்ணிப் பார்த்தோமேயானால் ஏமாற்றம் ஒன்றே மிஞ்சும்.






சமூக நீதி என்பது எல்லா சமூகங்களையும் சமமாக பாவித்து அவர்களிடையே எவ்வித பாரபட்சமுமின்றி நீதியுடன் நடந்து கொள்வதாகும். இந்தியாவின் மக்கள் தொகையைப் பொறுத்தவரை இருபது சதவிகித மக்கள் இஸ்லாமிய சமூகத்தை சார்ந்தவர்கள். அரசு வெளியிடுகின்ற புள்ளி விபரங்களின் அடிப்படையில் முன்னேற்றமடையாமல் அடித்தட்டில் இருக்கின்ற சமூகமாக இஸ்லாமிய சமூக மக்களே இருக்கின்றனர்.





சுதந்திர இந்தியாவில் இதுவரை நடந்திருக்கின்ற பெரும்பாலான கலவரங்களில் பாதிக்கப் பட்டிருப்பது இஸ்லாமிய சமூக மக்களே. மீரட், பாகல்பூர், மும்பை, ஒட்டுமொத்த குஜராத் என முஸ்லிம்களுக்கெதிரான பாதிக்கப்பட்ட பட்டியல்கள் நீளும். வர்ணாசிரம சிந்தனைகளும் மூட நம்பிக்கைகளும் புரையோடி போயிருக்கும் வட மாநிலங்களின் நிலைமை தான் இவ்வாறென்றால் சமூக நீதியின் பிறப்பிடம் என்று திராவிட இயக்கத்தவர்களால் பெருமையுடன் குறிப்பிடப்படும் தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆட்சிக் கட்டிலேறியும் சமூக நீதியை அடையாத சமூகமாகவே இஸ்லாமிய சமூகம் இருக்கின்றது.
திருமாவளவனால் "சமத்துவப் பெரியார்" என்று போற்றப்படுகின்ற கருணாநிதியின் ஆட்சியிலாகட்டும் அல்லது கி.வீரமணியால் "சமூக நீதி காத்த வீராங்கனை" என்று போற்றப்பட்ட ஜெயலலிதாவின் ஆட்சியிலாகட்டும், சமூக நீதி என்பது ஏட்டளவில் கூட இங்கில்லை என்பது இவர்களுடைய ஆட்சியில் நடந்த, நடைபெறுகின்ற நிகழ்வுகளின் மூலம் எவரும் அறிந்து கொள்ளலாம். இஸ்லாமிய மக்களை ஒடுக்கும் வண்ணம் அவர்கள் மீது அரச பயங்கரவாதம் எந்தளவிற்கு பிரயோகம் செய்யப்பட்டது என்பதற்கு நிகழ்காலத்தின் மெளன சாட்சிகளாய் கோவை கலவர நிகழ்வுகள் நமக்கு காட்சி தருகின்றன.சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு இன்று வரை இஸ்லாமிய சமூக மக்களின் உரிமைகள் திட்டமிட்டு பறிக்கப்பட்டு வருகின்றன. மதக் கலவரங்களிலும் இனப் படுகொலைகளிலும் முஸ்லிம்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பாதிப்படைந்த முஸ்லிம்களின் மீதே வழக்குகளைத் தொடுத்து அவர்களை நிலை குலைய செய்கின்றன அரசுகள்






பாபர் மஸ்ஜித் தகர்ப்பிற்குப் பின்னர் இஸ்லாமிய இளைஞர்களை குறிவைத்து அரச பயங்கரவாதம் ஏவப்படுகின்றது. ஆட்சியாளர்களின் தவறுகளுக்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராட முன் வருகின்றவர்களை குறிப்பாக முஸ்லிம் இளைஞர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கின்ற மனோபாவத்தை அரசு திட்டமிட்டு உருவாக்குகின்றது. தீவிரவாதத்தின் அடையாளமாக தாடி உருவகப்படுத்தப்பட்டு விட்டதை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அவர்களின் கருத்து எதிரொலிக்கின்றது. உளவியல் ரீதியில் ஒரு சமூகத்தையே நிலைகுலைய செய்கின்ற அவமானகரமான செயல்கள் அரசுகளின் ஆதரவுடன் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.





கோவையில் அரசும் சங்பரிவார்களும் இணைந்து நடத்திய முஸ்லிம்களுக்கெதிரான கலவரங்களும் அதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களைக் காட்டி திறந்த வெளி சிறைச்சாலைகளாக தமிழகத்தின் பல முஸ்லிம் பகுதிகள் இன்று வரை நீடிப்பதும் சம நீதி என்பது முஸ்லிம்களைப் பொறுத்தவரை கானல் நீராகவே தமிழக ஆட்சியாளர்களால் உருவேற்றி வைக்கப்பட்டிருக்கின்றதோ என்ற ஐயத்தை நமக்கு ஏற்படுத்துகின்றது. வீரவாள் ஒன்றை பரிசாக பெற்றதற்காக இன்றுவரை குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யாமலும் பிணையும் கிடைக்காமலும் பா.ம.க வின் முன்னாள் பொருளாளர் குணங்குடி அனீபா போன்ற எண்ணற்ற முஸ்லிம் சமூக அப்பாவிகள் சிறைச்சாலையில் வாடுகின்ற அவல நிலைமையும் தொடரவே செய்கின்றது.




இவரைத் தான் ஆட்டோ ஓட்டுனர் அனீபா என்று பா.ம.க இராமதாஸ் சமீபத்தில் அவமானப்படுத்தினார். பிற கட்சிகளுக்கு உழைக்கும் முஸ்லிம்களுக்கு கடைசியில் இத்தகைய அவமானங்கள் தான் மிஞ்சும் என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும்
ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்களுடைய வழிப்பாட்டுத் தலங்கள் புனிதமானவை. முத்துப்பேட்டை போன்ற ஊர்களில் முஸ்லிம்களின் வழிப்பாட்டுத் தலமான பள்ளிவாசலில் காவல்துறை அத்துமீறி காலணிகளுடன் நுழைந்ததும் உள்ளே இருக்கின்றவர்களை கண்மூடித்தனமாக தாக்கியதும் கருணாநிதியின் சமூக நீதியை படம் பிடித்து காட்டுகின்ற நிகழ்வாகவே இருக்கின்றது. முஸ்லிம்கள் தங்கள் உயிரை விட மேலாகவே இறைத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை போற்றுபவர்கள். அப்படிப் பட்ட நபிகள் நாயகத்தை கேலிச்சித்திரமாக வெளியிட்டு தங்களின் குரூர புத்தியை வெளிப்படுத்தியது தினமலர் நாளிதழ். இதற்கு எதிராக தமிழக முஸ்லிம்கள் அனைவரும் கொந்தளித்து எதிர்ப்பை தெரிவித்த போதெல்லாம் தினமலர் மீது நடவடிக்கை எடுக்காத கருணாநிதி அரசு,தினமலருக்கெதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்த போது அவர்களின் நிழலைக் கூட கைது செய்ய மனமில்லாத கருணாநிதியின் ஆட்சி, ஆபாசத்தை கடைவிரித்து இந்திய கலாச்சாரத்தை சீரழிக்கும் நடிகைகளைப் பற்றிய உண்மைகளை தினமலர் எழுதியவுடன் அந்த நாளிதழின் மீது நடவடிக்கை எடுக்கிறதென்றால் அதுவும் செய்தி ஆசிரியரை கைது செய்யும் அளவிற்கு அதி தீவிரமான நடவடிக்கை என்றால் கருணாநிதியின் ஆட்சியில் திரைக்கூத்தாடிகளுக்கு ஒரு நீதி முஸ்லிம்களுக்கு ஒரு நீதியா? இத்தகைய சமூக நீதியை சட்டவடிவமாக்கத் தான் கருணாநிதி அரசியலுக்கு வந்தாரா? வால்போஸ்டர் ஒட்டியே வாழ்க்கையை தொலைத்த ஆயிரக்கனக்கான தி.மு.க தொண்டர்கள் பலர் சந்திக்க முடியாத தமிழக முதல்வர் கருணாநிதியை, வால்போஸ்டரிலும் ஆபாசத்தை அள்ளித்தெளிக்கும் நடிகை ஷகீலா சந்தித்ததுக் கூட திரைக்கூத்தாடிகளுக்கு கருணாநிதியின் அரசு கொடுக்கும் சலுகைகளின் விளைவு தான்.





சமூக நீதி தத்துவங்களில் ஜெயலலிதாவுக்கு நம்பிக்கை இல்லை என்பதை அரசியலை கூர்மையாக அவதானிக்கும் எவரும் சொல்லி விடலாம். வெறுமனே அரசியலுக்காக மட்டுமே சமூக நீதியை முன்னெடுப்பவர் ஜெயலலிதா. ஆனால் கருணாநிதியோ சமூக நீதியை நிலை பெற செய்யவே அரசியலுக்கு வந்ததாக சொல்பவர். அவருடைய ஆட்சியிலும் சமூக நீதி இல்லை என்பது அவருடைய எழுபதாண்டு அரசியல் வாழ்க்கைக்கு அழகு சேர்ப்பதாக இருக்காது. 'நெஞ்சுக்கு நீதி' புத்தகத்தை எழுதி விட்டால் மட்டும் நீதி நிலைப் பெற்று விடாது. மாறாக ஆட்சி அதிகாரம் கையிலிருக்கும் போது எல்லா சமூகத்தையும் சமமெனக் கருதி நீதி செலுத்த வேண்டும். இது தான் சமூக நீதியாகும். இத்தகைய சமூக நீதியை கருணாநிதியின் ஆட்சி சரியாக அமுல்படுத்தவில்லையென்றால் அவரால் மிகவும் நேசிக்கப்படும் திருக்குறளே முடிவை சொல்லுகின்றது.




"எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும். "



திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதிய தமிழறிஞர் கருணாநிதிக்கு இக்குறளை நாம் விளக்க தேவையில்லை.


நன்றி: உணர்வு வார இதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக