அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

வியாழன், 13 மே, 2010


ஆளுமையை உயர்த்திக்கொள்ளுங்கள் வெற்றி பின் தொடரும்....

உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. தொழில்நுட்பம் மாறிக் கொண்டிருக்கிறது. அதன் மதிப்புகளும் ‎மாறிக் கொண்டிருக்கின்றன.

உலக நாடுகள் மேற்கொள்கிற வணிகச் சந்தை நோக்குடைய ‎பொருளாதாரக் கொள்கைகளால் உலகம் மேன்மேலும் போட்டிகள் மிகுந்ததாகவும் சவால்கள் ‎நிறைந்ததாகவும் ஆகிக் கொண்டிருக்கிறது.

புதிய பொருளாதாரம் உருவாக்கும் சவால்களை நாம் சந்திக்கத் தயாராக இருக்கிறோமா? புதிய ‎நூற்றாண்டின் தேவைக்கு ஏற்ப புதிய தலைமுறையினருக்குப் பயிற்சி அளிக்க நம்முடைய கல்வி ‎அமைப்புகள் முடுக்கப்பட்டிருக்கின்றனவா? ‎சில திறமைகளைச் சிறந்த முறையில் கற்று சரியான முறையில் விடாமுயற்சியுடன் கடைப்பிடிக்க ‎வேண்டும். அதன் மூலம் வாழ்க்கையில் சிறப்படையத் தேவையான தன்னம்பிக்கை, உறுதி, ‎பொறுமை உள்ளிட்ட பண்புகளை வளர்க்க முடியும். ‎தங்களிடம் உள்ள ஆக்கபூர்வ பண்புகளைக் கண்டுகொள்ள வேண்டும், அதன் மூலம் பல்வேறு ‎திறமைகளைப் பெறுவதற்கான சாத்தியங்களை எண்ணிப் பார்க்க வேண்டும்.

‎இலக்கு குறித்து திட்டமிடல், தகவல் தொடர்பு, காலத்தைச் சரிவரத் திட்டமிட்டுப் பயன்படுத்துதல், ‎குழு உணர்வுப் பணி, வளத்தைப் பயன்படுத்தல், இணக்கநயப் பண்பு, முடிவெடுத்தல், நெருக்கடி ‎நேரங்களில் நிர்வகிக்கும் தன்மை, தலைமைப் பொறுப்பு, இண்டர்வியூவை எதிர் கொள்வதற்கான ‎நுட்பங்கள் போன்ற திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். ‎குறிப்பிட்ட திறமைகளை மேன்மேலும் நெறிப்படுத்தி வளர்த்துக் கொள்ள வேண்டும். ‎

காலத்துக்கேற்ற வகையில் அவற்றைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ‎இளம் பருவத்திலேயே வாழ்க்கையைச் சரிவர நிர்வகிப்பதற்கான பயிற்சிகளைத் தொடங்க வேண்டும். ‎பல்வேறு திறமைகளைக் கற்றுக் கொண்டபின் அவற்றில் தொடர்ந்த பயிற்சி தேவை. திருத்தங்கள், ‎மறுமுறை செய்து பார்த்தல், தவறுகள் மீண்டும் வராமல் தவிர்த்தல் ஆகியவை வெற்றியை நோக்கிச் ‎செல்ல உதவும்.

‎காலத்திற்கேற்ற சுய ஆய்வும் செல்லும் நெறிமுறைகளில் தேவையான திருத்தங்களும் உறுதியாக ‎வெற்றியின் வாயிலை நோக்கி இட்டுச் செல்லும். உறுதியான முடிவு, கூர்நோக்கு, கண்காணிப்பு ‎ஆகியவை வெற்றிக்கான படிக்கட்டுகள்.

‎தனிநபர் பண்புகளை மறுசீரமைப்புச் செய்வதற்கான பயிற்சிக்கு எவ்வாறு செல்ல வேண்டும்? ‎சில யோசனைகள்:

‎‎* உங்களின் தனிநபர் பண்புகளில் உள்ள நிறை, குறைகளைக் கண்டு கொள்ளுங்கள்.

‎‎* உங்கள் நிறைகளைச் சிறக்க முயற்சி செய்யுங்கள்.

‎‎* உங்கள் குறைகளைக் கண்டு கொள்ளுங்கள். அதுவே, முன்னேற்றத்துக்கு உதவியாக இருக்கும்.

‎‎* வழிகாட்டுதலுக்கும் நெறிப்படுத்துவதற்கும் பழகும் பாங்கியல் அறிவியலாளர்கள், மனிதவள ‎மேம்பாட்டுக் குழுவினர் அல்லது வணிகத் துறை குழுவினரை அணுகலாம். ‎‎

* கடுமையான பயிற்சியைத் தொடருங்கள். ஆக்கப்பூர்வமான போக்கினைப் பேணி, சிறப்படையுங்கள்.

‎‎* விரைவாக வெற்றியைப் பெற முடியாத நிலையில் பொறுமையாக இருங்கள். பயிற்சியே ‎மனிதனை முழுமையாக்குகிறது. ‎‎

* மற்றவர்களின் பழகும் பாங்கு அமைவுகளைக் கூர்ந்து நோக்குங்கள். குறைகளைத் தவிர்க்கவும். ‎நிறைகளைப் பேணவும். ‎‎

* ஆக்கபூர்வமான போக்குடன் கற்பதற்குத் தயாராக வேண்டும். ‎ஆக்கபூர்வமான பாதையில் செல்ல நீங்களே மனது வைத்துவிட்டீர்கள் என்றால் உங்களது ‎முன்னேற்றத்தை எதுவும் தடுக்க முடியாது. வெற்றி உங்களைப் பின்தொடர்ந்து வரும்.‎

நன்றி - தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக