தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீடு தொடரும்: சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
புதுடெல்லி, ஜுலை.14-
மண்டல் கமிஷன் பரிந்துரை தொடர்பான வழக்கில் கடந்த 1992-ம் ஆண்டு தீர்ப்பு கூறிய சுப்ரீம் கோர்ட்டு, மாநிலங்களில் இடஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்று உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, 69 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்வதற்காக, கடந்த 1993-ம் ஆண்டில் தமிழக அரசு சட்டம் நிறைவேற்றியது.
கோர்ட்டு நடவடிக்கை மூலம் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் அந்த சட்டம் சேர்க்கப்பட்டது. இதற்கிடையில், தமிழக அரசின் 69 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து வக்கீல் கே.எம்.விஜயன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன பெஞ்ச், 1973-ம் ஆண்டுக்குப்பிறகு 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்ட அனைத்து வழக்குகளையும் பரிசீலனை செய்யும் அதிகாரம் கோர்ட்டுக்கு உண்டு என்று பரபரப்பான தீர்ப்பு வழங்கியது. கடந்த 2007-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த தீர்ப்பு கூறப்பட்டது.
அதைத்தொடர்ந்து, தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு 3 நீதிபதிகள் பெஞ்ச் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு வரும்வரை 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்ந்து நீடிக்க அனுமதி வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், எஸ்.எச்.கபாடியா, கே.எஸ்.ராதாகிருஷ்ணன், சுதந்தர்குமார் ஆகிய 3 நீதிபதிகளை கொண்ட சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச் முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் வக்கீல் பி.எஸ்.ராமன் மற்றும் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் கோபால சுப்பிரமணியம் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.
மண்டல் கமிஷன் அறிக்கையின்படி 50 சதவீதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு அளிக்கக்கூடாது என்றாலும், மாநிலங்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள் தொகைக்கு ஏற்பவும், மற்றும் சில காரணங்களுக்காகவும் 50 சதவீதத்துக்கும் கூடுதலாக இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று அவர்கள் வாதிட்டனர்.
தமிழக அரசு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள் 69 சதவீத இட ஒதுக்கீடு மேலும் ஒரு ஆண்டுக்கு தொடர அனுமதி வழங்கினார்கள். அத்துடன் "தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் 50 சதவீத அளவுக்கு மேல் உள்ளனரா? என்பது போன்ற ஆவணங்களை ஆதாரத்துடன் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திடம் மாநில அரசு வழங்க வேண்டும்'' என்றும் உத்தரவிட்டனர்.
"அந்த ஆவணங்களை பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் ஒரு ஆண்டுக்குள் பரிசீலனை செய்து இட ஒதுக்கீடு அளவு பற்றி தமிழக அரசுக்கு பரிந்துரை வழங்க வேண்டும். அதன் அடிப்படையில், தமிழக அரசு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்'' என்றும் நீதிபதிகள் அந்த உத்தரவில் குறிப்பிட்டு உள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் 73 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கையும் சுப்ரீம் கோர்ட்டின் இதே பெஞ்ச் விசாரித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது.
கர்நாடக மாநிலத்திலும் மேலும் ஒரு ஆண்டுக்கு இடஒதுக்கீடு தொடர அனுமதி அளித்து இருப்பதுடன், புதிய விவரங்களின் அடிப்படையில் இட ஒதுக்கீடு பிரச்சினையை மறு ஆய்வு செய்யும்படி மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
நன்றி - மாலைமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக