அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

சனி, 24 ஜூலை, 2010

போலி என்கவுண்டர் விவகாரம்: குஜராத் மந்திரி `திடீர்'ராஜினாமா சி.பி.ஐ. நடவடிக்கையால் பணிந்தார்


ஆமதாபாத், ஜுலை. 24-
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் கடந்த 2005-ம் ஆண்டு தீவிரவாதி என்று கூறி சோராபுதீன் ஷேக் என்பவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.ஆனால் சோராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் நடத்தி கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. குஜராத்தை சேர்ந்த கிரானைட் தொழில் அதிபர்கள் சிலரிடம் சோராபுதீன் 5 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும், இதைத் தொடர்ந்து மந்திரி அமீத் ஷா உத்தரவின் பேரில் சோராபுதீன் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் புகாரில் கூறப்பட்டது. இது பற்றி சி.பி.ஐ. விசா ரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டது. இதையடுத்து சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் சோராபுதீன் போலி என்கவுண்டரில் தான் கொல்லப்பட்டார் என்பது உறுதியானது.
சி.பி.ஐ. உத்தரவின் பேரில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட 10 போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகும் படி குஜராத் மாநில உள்துறை துணை மந்திரி அமீத் ஷாவுக்கு சி.பி.ஐ. 2 தடவை சம்மன் அனுப்பியது.ஆனால் அந்த சம்மனை மந்திரி அமீத்ஷா ஏற்க வில்லை. சி.பி.ஐ. அலுவ லகத்துக்கு சென்று ஆஜராகவும் அவர் மறுத்து விட்டார். இதனால் அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டது.கைது நடவடிக்கையை தவிர்க்க அவர் சார்பில் சி.பி.ஐ. கோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் சி.பி.ஐ. அவருக்கு முன் ஜாமீன் கொடுக்காமல் மனுவை தள்ளுபடி செய்தது.இதையடுத்து குஜராத் ஐகோர்ட்டில் அவர் ஜாமீன் கேட்டு மனு செய்ய திட்ட மிட்டுள்ளார்.அமீத் ஷா மீதான போலி என்கவுண்டர் வழக்கு விசாரணைகள், குஜராத் மாநில பா.ஜ.க. அரசுக்கும், முதல்-மந்திரி நரேந்திர மோடிக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அமீத்ஷா, மோடியின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவராவார். இதனால் நரேந்திரமோடி தனிப்பட்ட முறையிலும் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்.அமீத் ஷாவை காப்பாற்ற நரேந்திர மோடி மேற்கொண்ட முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்க வில்லை. இதனால் அமீத்ஷா தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவர் எங்கு இருக்கிறார் என்ற விபரம் தெரிய வில்லை.இதற்கிடையே இந்த வழக்கில் சி.பி.ஐ. நேற்று தனது முதல் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. அதில் உள்துறை இணை மந்திரி அமீத் ஷா மீது கொலை, மிரட்டி பணம் வசூலித்தல், ஆதாரங்களை அழித்தல் உள்பட பல குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுள்ளது. சி.பி.ஐ.யின் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக அமீத் ஷா கைது செய்யப்படுவது தவிர்க்க முடியாதது என்று தெரிகிறது.
சி.பி.ஐ. தாக்கல் செய் துள்ள குற்றப்பத்திரிகையில், "குஜராத்தை சேர்ந்த 7 தொழில் அதிபர்களிடம் ரூ.5 கோடி கேட்டு அமீத்ஷா அச்சுறுத்தினார். அதற்கான ஆதாரங்கள் உள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அமீத் ஷாவுக்கு எதிராக 20 பேர் சாட்சி அளித்திருப்பதும் அந்த குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சாட்சிகளில் 4 பேர் தங்கள் வாக்கு மூலத்தை மாஜிஸ்திரேட்டிடமே நேரில் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.அமீத் ஷாவின் நெருங்கிய கூட்டாளிகளான அஜய்படேல், யஷ்பால் ஆகியோருக்கும் போலி என்கவுண்டரில் தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் இருவரிடமும் ஏற்கனவே சி.பி.ஐ. விசாரித்து முடித்து விட்டது.இந்த வழக்கில் ஏற்கனவே 15 பேர் கைதாகி கடந்த 3 ஆண்டுகளாக ஜெயிலில் உள்ளனர். அமீத் ஷாவையும் கைது செய்ய சி.பி.ஐ. தீவிரமாகியுள்ளது. சி.பி.ஐ.யின் பல்வேறு படைகள் அமீத் ஷாவை தேடி நேற்று நாலாபுறமும் புறப்பட்டதால் அமீத் மீதான பிடி இறுகியுள்ளது.ஐகோர்ட்டிலும் அமீத் ஷாவுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா என்பதில் கேள்விக்குறி நிலவுகிறது. கடத்தல், கொலை குற்றச்சாட்டுக்களில் இருந்து இனி தப்ப இயலாது என்ற சூழ்நிலைக்குள் அவர் தள்ளப்பட்டுள்ளார். இதையடுத்து இன்று அதிகாலை உள்துறை இணை அமைச்சர் பதவியில் இருந்து அமீத்ஷா விலகினார்.அவர் தனது ராஜினாமா கடிதத்தை முதல்-மந்திரி நரேந்திரமோடிக்கு அனுப்பி வைத்தார்.
முதல்- மந்திரி நரேந்திர மோடி தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றுள்ளார்.டெல்லி விமான நிலையத்தில் அவரை சந்தித்த நிருபர்கள் அமீத்ஷா விவகாரம் குறித்து கேட்டனர். அதற்கு பதில் அளித்த நரேந்திர மோடி, "அமீத்ஷா பதவியை ராஜினாமா செய்து கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதம் காந்தி நகரில் உள்ள என் வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டதாக எனக்கு தகவல் சொன்னார்கள். நான் குஜராத் திரும்பிச் சென்றதும், அமீத் ஷாவின் ராஜினாமா கடிதம் ஏற்கப்படும்'' என்றார்.மோடியிடம் நிருபர்கள், "பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் அமீத் ஷா தன் மீதான குற்றச் சாட்டுக்களை ஒத்துக் கொள்கிறாரா? என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த நரேந்திரமோடி, `சட்டத்தின் கீழ் அவர் தன்னை குற்றவாளி என்று ஒத்துக் கொண்டிருக்கிறார். சில நடைமுறைகள் பின்பற்றப்பட உள்ளது' என்றார்.அவர் மேலும் கூறுகையில், "இந்த விவகாரத்தை அமீத் ஷா சட்டரீதியாக எதிர்கொள்வார். சட்டம் அவருக்கு நிச்சயம் நீதி வழங்கும் என்று நம்புகிறேன்'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக