அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

சனி, 31 ஜூலை, 2010


வாழ்க ஜனநாயகம்!

ஆந்திராவில் தெலுங்கானா மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக வலியுறுத்தி வருபவர் சந்திரசேகர் ராவ். இக்கோரிக்கைக்காக இவர் பல நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டவர் என்பதோடு, தனி தெலுங்கானாவுக்கு ஆதரவாக இவரது கட்சி எம்.எல்.ஏக்கள் 11 பேரும், பாரதீய ஜனதாவை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ. வும் ராஜினாமா செய்தனர்.

இந்த 12 தொகுதிகளுக்கும் கடந்த 27 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி 11 இடங்களிலும் பாரதீய ஜனதா ஒரு இடத்திலும் மீண்டும் வெற்றிவாகை சூடியுள்ளது. அதாவது அவர்களது ஆசனத்தில் மீண்டும் அவர்களே அமர்ந்துள்ளனர். ஆளும் காங்கிரஸ் கட்சிக்கோ ஒரு இடம் கூட கிடைக்காதது குறித்து அரசியல் அரங்கில் அதிர்ச்சி அலை வீசுகிறது. இது ஒருபுறமிருக்க,

இந்த இடைத்தேர்தல் கேலிக்கூத்தானது என்றே மக்கள் கருதுகிறார்கள். ஏனெனில், எந்த தெலுங்கானாவுக்கு ஆதரவாக தெலுங்கானா ராஷ்டிர சமிதி எம்.எல்.ஏ.க்களும், பி.ஜே.பி எம்.எல்.ஏ வும் ராஜினாமா செய்தார்களோ அந்த தெலுங்கானா மாநிலம் அதிகாரப்பூர்வமாக அமையாத நிலையில் மீண்டும் இவ்விரு கட்சிகளும் அதே தொகுதிகளில் போட்டியிட்டது ஏன்..? தெலுங்கானா மாநிலம் எப்போது அமைகிறதோ அப்போதல்லவா இவர்கள் மீண்டும் போட்டியிருக்கவேண்டும்..?

ஆக, அரசியல் ராஜதந்திரங்களில் 'ராஜினாமா' என்னும் வித்தையை நன்றாகவே அரசியல் கட்சிகள் பயன்படுத்திக்கொள்கின்றனர். எது எப்படியோ இந்த இடைத்தேர்தல் மூலம் மக்களின் வரிப்பணம் மீண்டும் பாழ்படுத்தப் பட்டுள்ளது என்பதே அப்பாவி பொதுஜனத்தின் புலம்பலாக உள்ளது. வாழ்க ஜனநாயகம்[!]

முகவை அப்பாஸ், குவைத்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக