பாபர் மசூதி – ராமர் பிறந்த இடம் வழக்கில் தீர்ப்பு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் சங் பரிவார் அமைப்புகளால் தகர்க்கப்பட்ட பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து நடந்துவநத வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் அடுத்த மாதம் தீர்ப்பு வழங்கவுள்ளதையடுத்து விரிவாக பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்திய அரசின் உதவியை உ.பி. மாநில அரசு நாடியுள்ளது.
பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமர் கோயில் இருந்ததாக ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள், பாரதிய ஜனதா உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள் சார்பாக தொடரப்பட்ட இவ்வழக்கில், ஆதாரங்களைத் திரட்டியளிக்குமாறு அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுத்த உத்தரவிற்கிணங்க, பாபர் மசூதி இருந்த இடத்தில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்து, அதனடிப்படையில் அறிக்கையும் அளித்துள்ளது.
இவ்வழக்குத் தொடர்பாக பல வரலாற்று ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாபர் மசூதி இருந்த இடத்தில் ஏற்கனவே இராமர் கோயி்ல் இருந்ததா? இல்லையா? என்பதை அலகாபாத் உயர் நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை அளிக்க உள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்போம் என்று அகில இந்திய முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியம் அறிவித்துள்ளது. ஆனால் அப்படிப்பட்ட எந்த உறுதி மொழியையும் சங் பரிவார் அமைப்புகள் வழங்கவில்லை.
இந்த நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பின் காரணமாக கலவரம் ஏதும் ஏற்படாமல் தடுக்க கூடுதலாக 458 படையணிகளை அனுப்பி வைக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளதாக உ.பி.அரசு அதிகாரி கூறியுள்ளார்.
“பாதுகாப்புத் தொடர்பான திட்டங்களின்படி, 8 காவல் துறை துணை இயக்குனர்கள், 5 காவல் தலைமை ஆய்வாளர்கள் கட்டுப்பாட்டில் 16 பாதுகாப்பு மண்டலங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. காவல் துறையின் தலைமை இயக்குனர் சிறப்பு மேற்பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்” என்று உ.பி.அதிகாரி கூறியுள்ளார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஆபத்தான பகுதிகளை வரையறை செய்து தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சியாளர்களை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார் என்று பிடிஐ செய்தி கூறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக