அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

புதன், 22 செப்டம்பர், 2010

நாளை மறுநாள் தீர்ப்பு:(வெள்ளிக்கிழமை) பாதுகாப்பு வளையத்தில் அயோத்தி அதிரடிப்படை வீரர்கள் குவிப்பு

அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் யாருக்கு சொந்தம் என்று லக்னோ ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் நாளை மறுநாள் (24-ந்தேதி) தீர்ப்பு வழங்கப்படுகிறது. தீர்ப்பு யாருக்கு சாதகமாக இருந்தாலும் எதிர் தரப்பினர் வன்முறையில் ஈடுபடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நாடு முழுவதும் கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதை தடுக்க நாடு முழுவதும் பாதுகாப்பு படைகள் உஷார்படுத் தப்பட்டுள்ளது.

அயோத்தியில் மோசமான நிலைமை ஏற்படலாம் என கருதி அங்கு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அயோத்தி நகரம் முழுவதையும் பாதுகாப்பு படையினர் தங்கள் வளை யத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். இங்கு மத்திய போலீஸ் படையினரும், உத்தரபிரதேச போலீசாரும் கூட்டாக பாதுகாப்பு பணிகளை கவனித்து வருகின்றனர். அயோத்தியில் மட்டும் 52 கம்பெனி மத்திய படை குவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் அதிரடிப்படை பிரிவும் உள்ளது. சர்ச்சைக் குரிய இடத்தை சுற்றி அதிரடிப்படையினர் தயார் நிலையில் நிற்கின்றனர்.

உத்தரபிரதேசம் முழுவதும் நிலைமை மோசமடையலாம் என எதிர்பார்க்கப்படுவதால் அங்கு மற்ற மாநிலங்களை விட கூடுதல் பாதுகாப்பு உள்ளது. உத்தரபிரதேசத்தில் மட்டுமே 1 லட்சத்து 94 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். முக்கிய இடங்களில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் 32 இடங்களில் பதட்டம் நிறைந்த பகுதியாக கண்டறியப்பட்டு உள்ளது. அதில் 4 இடங்கள் மிக மோசமான பகுதியாக கணித்து உள்ளனர். இந்த பகுதிகளில் அதிரடிப்படை யினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.
அனைத்து மாநில போலீசாரும் அதே போல பதட்டமான பகுதிகளை கண்டறிந்து உரிய பாதுகாப்பு வழங்கும் படி மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

உத்தரபிரதேசம் தவிர மராட்டியம், மத்திய பிரதேசம், குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் மோசமான நிலை ஏற்படலாம் என்று கருதுகின்றனர். எனவே அதிகபட்ச பாதுகாப்பு வழக்கும்படி மத்திய அரசு கூறியுள்ளது.

மக்களிடம் பதட்டம், குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான செய்திகளை டி.வி. நிறுவனங்கள் வெளியிடக் கூடாது. இது தொடர்பான கருத்து கணிப்புகளையும் வெளியிடக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக