அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

செவ்வாய், 12 அக்டோபர், 2010

அயோத்தி தீர்ப்பு: சேது சமுத்திர திட்டத்துக்கு சிக்கல்!

அயோத்தியில் உள்ள நிலம் ‘யாருக்கு சொந்தம்’ என்ற 65 ஆண்டு பழமையான கேள்விக்கு ‘இன்னாருக்குத்தான் சொந்தம்’ என்று வந்திருப்பதற்கு பதிலாக ‘எல்லாருக்கும் சொந்தம்’ என்று தீர்ப்பு வந்துள்ளது. ஆளாளுக்கு மூன்று பேர் தங்களுக்கு நிலம் வேண்டுமென்று கோர்ட்டில் கேட்டனர். மூன்று பேருக்குமே ‘இதற்குதானே ஆசைப்பட்டாய்? இந்தா பிடி நிலத்தை’ என்று ரொம்பவும் தாராளமாக பகிர்ந்து கொடுத்துவிட்டது அலகாபாத் ஐகோர்ட்

அரசியல் அரங்கில் ஒவ்வொரு கட்சிகளும் இந்தத் தீர்ப்புக்கு பிறகு புதிதாக நெளிவு சுளிவுகளுடன் ஆட துவங்கிருப்பதுதான் ‘அய்யோ பாவம்’ என உச்சு கொட்ட வைக்கிறது. முக்கால்வாசி கிணறு தாண்டிவிட்டாலும், அரசியல் எதிர்காலம் கருதி சர்வ ஜாக்கிரதையாக அடக்கிவாசிக்கிறது பி.ஜே.பி.

தீர்ப்புக்கு பிறகு முஸ்லிம் சமூகம் மிகுந்த மௌனமாக இருப்பதால் முக்கிய கட்சிகள் குழப்பமடைந்துள்ளன. முஸ்லிம்கள் கோபம் அடைவார்கள், அந்த கோபத்தில் லாபம் பார்க்கலாம் என நினைத்தனர். ஆனால், கோர்ட்டில் மேல்முறையீடு என்பதை தவிர வீதியில் இறங்கவோ வன்முறையில் ஈடுபடவோ அந்த சமூகம் தயார் இல்லை. அதற்காக இந்த நாடே அவர்களுக்கு சல்யூட் அடித்துக் கொண்டிருந்தாலும், இந்த சமூகத்து ஓட்டு வங்கியை கவனத்தில் கொண்டு அரசியல் நடத்தும் முலாயம்சிங், லாலு பிரசாத் போன்றவர்களுக்கு பெரும் குழப்பம்.

அதைவிட ஆளும்கட்சியான காங்கிரசுக்குதான் மகா குழப்பம். 1949 டிசம்பர் 22-ம் தேதி மசூதிக்குள் சிலைகள் திடீரென வைக்கப்பட்டபோது மாநிலத்திலும் மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சி. ஷாபானு வழக்கில் சுப்ரீம்கோர்ட் அளித்த தீர்ப்பை வலுவிழக்கச் செய்ததை சமன்படுத்த, பூட்டியிருந்த மசூதி கதவுகள் 1986 பிப்ரவரி 1-ல் திறந்துவிடப்பட்டபோதும் மாநிலத்திலும் மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சி. பொதுத்-தேர்தலுக்காக மசூதி வளாகத்திற்குள் பூஜைகள் நடைபெற்றபோதும் காங்கிரஸ் ஆட்சிதான். அந்த 1989-ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்காக அயோத்தியின் பைசாபாத் நகரில் ‘ராம ராஜ்யம் அமைப்பேன்’ என்ற முழக்கத்தோடு தேர்தல் பிரசாரத்தை துவக்கியதும் ராஜீவ்காந்திதான்.

மசூதி இடிக்கப்பட்ட 1992-லும் மத்தியில் ஆண்டது காங்கிரஸ் ஆட்சி. ‘பாகப்பிரிவினை தீர்ப்பு’ வரும் நிகழ்காலமான இப்போதும் காங்கிரஸ்தான் ஆட்சியில் இருக்கிறது. ஆனாலும் எதையுமே தடுக்க முடியவில்லையே என முஸ்லிம்கள் நினைத்து தங்களை கைகழுவ ஆரம்பித்தால்? அதனால் ‘இப்போது வந்துள்ள தீர்ப்பால், மசூதியை இடித்த குற்றம் நியாயமாகிவிடாது. அது மன்னிக்க முடியாத குற்றம். அதை செய்தவர்கள் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும்’ என்று காரியக் கமிட்டியில் தீர்மானத்தை போட்டுவிட்டு கவலையில் உட்கார்ந்-துள்ளது காங்கிரஸ்.

2007-ம் ஆண்டு சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றிட அப்போதைய மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, ரொம்பவும் மும்முரமாக இருந்த சமயம். சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், ‘வரலாற்றுப் பூர்வமாகவோ அல்லது விஞ்ஞானப் பூர்வமாகவோ ராமர் மற்றும் ராமர் பாலம் ஆகியவற்றுக்கு ஆதாரங்கள் இல்லை. ராமர் பாலம் என கூறப்படும் அது மனிதனால் கட்டப்பட்ட பாலம் அல்ல; இயற்கையாகவே ஏற்பட்ட மணற்படிமானம் அது என தொல்பொருள் ஆய்வு துறையான ஏ.எஸ்.ஐ. கூறுகிறது’ என்றிருந்தது. இது பெரும் அரசியல் புயலை கிளப்பவே, ஏ.எஸ்.ஐ.யின் இரு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். கலாசாரத் துறை அமைச்சர் அம்பிகா சோனி, தனது பதவியை ராஜினாமா செய்யப்போகும் அளவுக்கு நிலைமை இருந்தது. கடைசியில் மன்னிப்புக் கோரிய மத்திய அரசு, சுப்ரீம்கோர்ட்டில் வேறொரு புதிய மனுவை தாக்கல் செய்யுமளவுக்கு நிலைமை மாறியது.

சட்ட அமைச்சரான பரத்வாஜ், ‘ராமர் ஒரு வரலாற்று நாயகர், அதில் துளிகூட சந்தேகம் இல்லை’ என்று அடித்தார் ஒரு பல்டி. ஆக அப்போதே ராமரின் இருப்பை காங்கிரஸ் அரசாங்கம் ஏற்றுக் கொண்டுவிட்டது. இப்போது மீண்டும் ராமபிரானின் இருப்பும் அவரது பிறந்த இடமும்கூட அலகாபாத் கோர்ட் மூலம் உறுதிப்படுத்தப்-பட்டுள்ளது. ராமபிரானின் பிறப்பை அலகாபாத் ஐகோர்ட் அங்கீகரித்துள்ளது. இது சாத்தியமெனில், இப்போது சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள சேது சமுத்திர திட்ட வழக்கில், ராமர் பாலத்தை சேதப்படுத்தாமல் இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற இந்து அமைப்புகளின் வாதம் பலம்பெரும் வாய்ப்பும் உள்ளது. ஆனால், சேது சமுத்திர திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்த முடியாது என்று அப்போது அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சேது சமுத்திர திட்டத்தை இப்போதுள்ள நிலையில் நிறைவேற்றுவது குதிரை கொம்புதான்.

இந்த சிக்கலான நேரத்தில் தான் கப்பல் போக்குவரத்து அமைச்சராக இல்லாததற்காக டி.ஆர்.பாலு மகிழ்ச்சி கொள்ளலாம்!

நன்றி :keetru

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக