அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

சனி, 12 ஜூன், 2010

நீதித்துறையின் லஞ்ச ஊழலை சகித்துக்கொள்ள முடியாது: நீதிபதி இக்பால்!

நீதித்துறையில் லஞ்சம் மற்றும் ஊழலை சகித்துக் கொள்ள முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட நீதிபதி எம்.ஒய். இக்பால் கூறியுள்ளார்.சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக வெள்ளிக் கிழமையன்று (11.06.2010) பதவியேற்றுக் கொண்ட பின், உயர் நீதிமன்ற வளாகத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பில் கலந்து கொண்டு நீதிபதி இக்பால் பேசியதாவது:





தமிழக மக்களுக்கு நீதி பரிபாலனை செய்வதற்கு இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். சென்னை ஐகோர்ட்டு என்பது பாரம்பரியமிக்க நீதி பரிபாலனை செய்துகொண்டிருக்கும் ஒரு கோவிலாகத்தான் இருக்கிறது. மக்களுக்கு நீதி வழங்கும் விஷயத்தில் நீதிபதிகளும், வக்கீல்களும், கடவுளுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாக இருக்கிறார்கள். அதாவது, உலகத்தில் நீதி வழங்கும் பணிக்காக கடவுளால் நேரடியாக நியமிக்கப்பட்டவர்கள் இவர்கள்.





நீதி பரிபாலனை என்பது ஒரு தெய்வீக பணி. ஒவ்வொரு வழக்கிலும் நீதி கிடைத்துவிடாதா? என்பதுதான் ஒவ்வொரு மக்களின் கண்களிலும் தென்படும் நம்பிக்கை. இதை நிறைவேற்றுவதற்கு வக்கீல்களும், நீதிபதிகளும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். சட்டத்தின் அடிப்படையில் மட்டுமல்ல, நல்லொழுக்கம், தர்மம் ஆகியவற்றின் அடிப்படையிலும் நாம் செயல்படுவது அவசியம்.





நீதி என்னும் புனித நீரூற்றை ஊழல் என்ற கறை படிந்த கரங்களால் மாசுபடுத்தக்கூடாது. ஒவ்வொரு நீதிபதிகளும் எப்பேற்பட்ட சூழ்நிலைகளிலும் நியாயமாகவும், நேர்மையாகவும் இருப்பது அவசியம். வக்கீல்களின் ஒத்துழைப்பு இல்லாமல் ஒரு முழுமையான நீதியை வழங்க முடியாது. வழக்கை நீதிபதிகள் நுட்பமாக கவனிக்காத பட்சத்தில், ஒரு நல்ல வாதத்தை வக்கீல்கள் வைக்க முடியாது. நீதிமன்றத்தில் நல்ல சூழ்நிலை நிலவ வேண்டுமானால் நீதிபதிகள், வக்கீல்கள் இடையே நல்லுறவு இருக்க வேண்டும்.





ஒரு தனி மனிதனுக்கு நீதிமன்றங்கள் மூலம் நீதி கிடைப்பதற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்றால், அவன் விரக்தியில் சட்டத்துக்கு புறமான முறைகளை பின்பற்ற ஊக்கமளித்துவிடும். இதுபோன்ற எண்ணங்கள் உருவாக்கப்பட்டுவிட்டால் கும்பலாக சேர்ந்து நீதி பெற முயற்சிப்பது, உடனடியாக நீதி பெறுவதற்கு ஏதாவது சட்டவிரோத காரியங்களை மேற்கொள்வது, குற்றவாளிகளுடன் இணைந்து கொள்வது போன்ற அவலநிலை ஏற்பட்டு, சமூக விரோதிகளை அதிகரிக்க செய்திடும்.





நீதிமன்ற புறக்கணிப்புகளை கோர்ட்டு ஊழியர்களும், வக்கீல்களும் மேற்கொள்ளாமல் இருப்பதற்கு உறுதி செய்யவேண்டும். எந்தவொரு பிரச்சினையுமே பேச்சு வார்த்தையின் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும். நீதிபதிகள், வக்கீல்கள் இடையே பிரச்சினைகள் உருவானால், அதை தீர்ப்பதற்கு வெளியில் உள்ளவர்களை அழைக்க கூடாது. வக்கீல்கள்தான் கோர்ட்டின் அதிகாரிகளாக இருக்கின்றனர். நீதி நிர்வாகம் செய்வதற்கு அவர்களின் உதவி அதிகம் தேவை. ஒவ்வொருவரும் பரஸ்பரம் மரியாதை கொடுத்து நடந்துகொள்வது மூலம் ஒரு ஆரோக்கியமான நல்லெண்ணத்தை உருவாக்கிக்கொள்ள முடியும்.





பிறப்பிக்கப்படும் உத்தரவுகளில் ஏழை மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். நீதி பரிபாலனை முறையை மேலும் வலுப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. ஊழல் எந்த வகையிலும் இருக்கக்கூடாது. நீதித்துறையின் ஒழுக்கத்துக்கும், ஒருமைப்பாட்டுக்கும் கேடு வந்துவிடக்கூடாது. இதுதான் நீதித்துறையின் மீது மக்கள் வைக்கும் நம்பிக்கையின் அடித்தளமாக உள்ளது.நீதித்துறை ஊழல் நிறைந்ததாக இருந்தால் மக்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டு, அதனால் சமூக ஒழுக்கம் கெட்டுவிடக்கூடும். எங்கோ நடக்கும் ஒருசில ஊழல் சம்பவங்களால் ஒட்டுமொத்த நீதித்துறையையே ஊழல் மிகுந்ததாக கூறிவிட முடியாது. நீதித்துறையின் லஞ்ச ஊழலை சகித்துக்கொள்ள முடியாது. ஊழல் பேர்வழிகளுக்கு நீதி பரிபாலனை முறையில் இடமில்லை. கொடுக்க முடியாததை கொடுப்பதாக யாரும் உறுதி அளிக்க கூடாது. சமுதாயத்தில் பின்தங்கிய மக்களும் நீதி பெறுவதற்காக மற்றவர்களைபோல், அவர்களுக்கும் சமவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.





நீதித்துறைக்கு நீண்ட நாட்களுக்கு எது சரியாக உள்ளதோ அதை மட்டுமே செய்யவேண்டும். பிரபலத்துக்காகவோ, அரசியலுக்காகவோ எதுவும் செய்யக்கூடாது. ஏழை எளிய மக்கள், சிறுபான்மையினர் நலன் புறக்கணிக்கப்படக்கூடாது. பிரிவினையை ஏற்படுத்தும் அரசியலில் தங்களை ஈடுபடுத்த வேண்டாம். ஒருதரப்பு மக்களுக்கு மட்டும் பயன் ஏற்படும் வகையில், நலிந்த மக்களை புறக்கணித்துவிட வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக