அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

செவ்வாய், 6 ஏப்ரல், 2010

இல்லாத ஜனநாயகத்தைத் தேடும் தொண்டர்கள்!!


எந்த விதத்திலும் முக்கியத்துவம் அற்ற பென்னாகரம் தேர்தல் முடிவு யாருக்கும் அதிர்ச்சியையோ ஆச்சரியத்தையோ அளித்திருக்க முடியாது. திருமங்கலம் பார்முலாவில் நடந்த மேலும் ஒரு (இடைத்) தேர்தல் அது.



ஆனால், அந்தத் தேர்தலில் தமிழ்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றதும், வைப்புத் தொகை (டெபாசிட்) இழந்ததும் ஏற்படுத்திய ‘அதிர்ச்சி’ காரணமாக அக்கட்சியின் ஒரு தொண்டர் தீக்குளித்து மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்கும் நிலையும், இன்று அக்கட்சியின் மற்றொரு தொண்டர் நஞ்சை அருந்தி உயிர் துறந்துள்ளார் என்று வந்துள்ள செய்திகள் மன வேதனையையும் அதிர்ச்சியையும் அளிப்பதாகும்.



தங்களை நம்பியுள்ள குடும்பத்தைக் காட்டிலும் தாங்கள் சார்ந்துள்ள கட்சிக்காக, அதன் பெருமை குறைந்துவிட்ட காரணத்தினால் இப்படி வாழ்க்கையை முடிந்துகொண்டதை ‘விபரீத முடிவு’ என்று சில வார்த்தைகளில் சொல்லி அமைதியடைய முடியாது. ஏனெனில் இரண்டு குடும்பங்கள் தங்கள் முக்கிய குடும்ப உறுப்பினரை இழந்துள்ளன.



இப்படிப்பட்ட நடவடிக்கைகள் நமது நாட்டைப் பொறுத்தவரை - குறிப்பாக தமிழ்நாட்டைப் பொறுத்தவரை - புதியதல்ல என்றாலும், தனது கட்சி தோற்றது என்பதை விட, அது டெபாசிட் இழந்தது என்ற நிலையே இவர்களின் இப்படிப்பட்ட விபரீத முடிவிற்கு காரணமாகியுள்ளது என்றால், எந்த அளவிற்கு ஜனநாயகம் குறித்து கட்சித் தொண்டர்களுக்கு புரிதல் உள்ளது என்ற கேள்வி எழுகிறது.



பென்னாகரத்தில் போட்டியிட்ட 4 கட்சிகளுமே வாக்காளர்களை வாங்கும் அந்த உன்னத ‘ஜனநாயக’ப் பணியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டன. இதில் ஆளும் கட்சி மிக அதிக தொகை கொடுத்து அதிக வாக்காளர்களை வாங்கி வெற்றி பெற்றது என்பது பென்னாகரம் அறிந்த பேருண்மையாகும். ஒரு வாக்கிற்கு ரூ.2,000 என்ற குறைந்த அளவு விலையை நிர்ணயித்து, வீட்டிற்கு எத்தனை வாக்காளர்கள் உள்ளனரோ அவர்கள் அனைவரையும் கணக்கிட்டு (ரேஷன் கார்டை வைத்து) உரிய தொகையையும் மிகப் பரவலாக அளித்துள்ளார்கள்.



‘ஒரு நாளில் மட்டும் பதினாலரை கோடி பிரித்துக் கொடுத்தோம்’ என்று அங்கு களப்பணி ஆற்றிய ஒரு உடன்பிறப்பு தெரிவிக்கிறார். மொத்தம் ரூ.25 கோடி செலவிட்டது ஆளும் கட்சி. அடுத்து அதிகமாக செலவு செய்தது முக்கிய எதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.க. என்பதும், போட்டியிட்ட மற்ற இரண்டு கட்சிகளும் தங்களால் இயன்ற அளவிற்கு ‘செலவு’ செய்தது மட்டுமின்றி, பிரியாணி விருந்தளித்து உபசரித்து வாக்குக் கேட்டதெல்லாம் அன்றாடச் செய்திகள்தான்.



இப்படி நடந்தத் தேர்தலில்தான் ஆளும் கட்சி வேட்பாளர் 36 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதில் ஜனநாயகத்தை எங்கே போய் தேடுவது? இந்த நாட்டில் பணத்தை இறக்காமல் தேர்தல் களத்தில் இறங்கும் கட்சி என்று ஏதாவது உண்டா? இறக்கும் பணத்தின் அளவுதான் மாறுகிறதே ஒழிய மற்ற எந்த தன்மை மாற்றமும் இல்லையே!



இதில் கவனிக்கத்தக்க விடயம் என்னவெனில், வாக்காளர்கள் மிக ‘ஆர்வமாக’ பணத்தை வாங்கிக்கொண்டு வாக்களித்ததுதான். இங்கு மட்டுமல்ல, திருமங்கலத்தில் இருந்து இந்த நாட்டின் நாடாளுமன்றத்திற்கு நடந்த பொதுத் தேர்தல் வரை இதுதான் நடந்து வருகிறது. இது திருமங்கலத்தில்தான் தோன்றியதா என்று ஆராய்ந்தால், சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே வெற்றிலை பாக்கு வைத்து பணத்தையும் கொடுத்து சத்தியம் வாங்கி தேர்தலில் வென்ற கட்சி காங்கிரஸே என்று வரலாறு காட்டுகிறது!



இப்படித்தான் நமது நாட்டின் ஜனநாயகம் உள்ளது. வட இந்தியாவில் துப்பாக்கியுடன் வந்து வாக்குச் சாவடியைக் கைப்பற்றி வாக்களித்து வெற்றி பெரும் ‘ஜனநாயக முறை’ இருப்பதால்தான் இந்தியாவின் நாடாளுமன்றத்தில் குற்ற வழக்குகள் உள்ள நிறைய பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதனைத்தான் தூய்மை செய்யப்போகிறேன் என்று அப்பழுக்கற்ற நமது உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூட சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக