அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

ஞாயிறு, 25 ஜூலை, 2010

திருச்சி மாநகராட்சி 28வது வார்டு இடைத்தேர்தல்: தி.மு.க., வெற்றி

திருச்சி: திருச்சி மாநகராட்சியின் 28வது வார்டுக்கு நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் தாஜூதீன் 2,360 ஓட்டு வித்தியாசத்தில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் மீராமைதீனை தோற்கடித்து வெற்றி பெற்றார்.


திருச்சி மாநகராட்சி 28 வார்டு கவுன்சிலராக இருந்த சுப்பையா இறந்ததையடுத்து இடைத்தேர்தல் நடந்தது. கடந்த 22ம் தேதி நடந்த 28வது வார்டு இடைத்தேர்தலில் தி.மு.க., சார்பில் தாஜூதீன், மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் மீராமைதீன் முக்கிய வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இவர்கள் தவிர இன்னும் நான்கு பேரும் வேட்பாளராக களத்தில் இருந்தனர். அ.தி.மு.க., ம.தி.மு.க., கம்யூ., தே.மு.தி.க., மற்றும் பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்து விட்டன.

கடந்த 22ம் தேதி 28வது வார்டுக்கான இடைத்தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. 6,000க்கும் மேற்பட்ட ஓட்டு உள்ள அந்த வார்டில் மொத்தம் 4,765 ஓட்டு பதிவானது. நேற்று காலை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள பொன்மலை கோட்ட வருவாய் பிரிவு அலுவலகத்தில் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. எட்டு மின்னணு எந்திரங்களில் பதிவாகியிருந்த ஓட்டு இரண்டு டேபிளில் நான்கு சுற்றாக எண்ணப்பட்டது. இதில், ஆரம்பம் முதலே தி.மு.க., வேட்பாளர் தாஜூதீன் முன்னிலை வகித்தார். ஓட்டு எண்ணிக்கை முடிவில் தி.மு.க., வேட்பாளர் தாஜூதீன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் மீராமைதீனை விட 2,360 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தி.மு.க., வேட்பாளர் தாஜூதீன் 3,318 ஓட்டும்,

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் மீராமைதீன் 958 ஓட்டும்,

ரகமத்துல்லா என்ற சுயேட்சை வேட்பாளர் 408 ஓட்டும் பெற்றனர்.

வெற்றி பெற்ற தி.மு.க., வேட்பாளர் தாஜூதீனுக்கு மாநகராட்சி கமிஷனர் பால்சாமி சான்றிதழ் வழங்கினார். அப்போது எம்.எல்.ஏ.,க்கள் அன்பில் பெரியசாமி,சேகரன், மேயர் சுஜாதா, துணைமேயர் அன்பழகன், கோட்டத்தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தாஜூதீன் அமைச்சர் நேருவை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ""தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவேன். வார்டில் மேலும் பல்வேறு அடிப்படை வசதி செய்து தரப்படும்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக