மாநகராட்சி இடைத்தேர்தல் பிரச்சாரம் ம.ம.க.,வினர் 10பேர் மீது வழக்கு!!
திருச்சி: 19.07.2010, அமைதியாக சென்ற திருச்சி மாநகராட்சி 28வது வார்டு இடைத்தேர்தல் பிரசாரத்தில் முதல் பரபரப்பாக, மனித நேய மக்கள் கட்சி (ம.ம.க.,) நிர்வாகிகள் 10 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். திருச்சி மாநகராட்சி 28வது வார்டு இடைத்தேர்தல் 22ம் தேதி நடக்கிறது. தி.மு.க., வேட்பாளராக தாஜூதின், ம.ம.க., வேட்பாளராக மீரான் மைதீன் உட்பட ஆறு பேர் போட்டியிடுகின்றனர்.பிரதான கட்சியான அ.தி.மு.க., போட்டியிடதால் பெரியளவில் தேர்தல் பரபரப்பு இல்லை. தி.மு.க.,வுக்கு இணையாக ம.ம.க.,வினர் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.பிரசாரத்தின்போது, தி.மு.க., குறித்தும், அதன் வேட்பாளர் குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்கின்றனர். அதனால், ஆங்காங்கே இரு கட்சியினரிடையே முட்டல், மோதல் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், ""எனது பிரசார போஸ்டரை கிழிக்கின்றனர். அவதூறு பிரசாரம் செய்கின்றனர்'' என்று ம.ம.க.,வினர் மீது தி.மு.க., வேட்பாளர் தாஜூதின், அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி ராமலிங்கத்திடம் புகார் கொடுத்தார்.அதன்பேரில், அக்கட்சியின் தேர்தல் பணிக்குழுச் செயலாளர் பைஸ் அகமது, நிர்வாகிகள் ஹக்கீம், பைசல், ரியாஸ் உட்பட 10 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பணப்பட்டுவாடா துவக்கம்:""இடைத்தேர்தல் நடக்கவுள்ள 28வது வார்டில், கரை வேட்டி கட்டாத சில நபர்கள் வீடுகளின் முன் சாக்பீஸால் குறிகளை இட்டு வருகின்றனர். வீடுகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்துக்காக ஆளுங்கட்சியினர் இந்த ரகசியக்குறி போடுவதாக கூறப்படுகிறது. ""இப்பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு இப்போதே பணப்பட்டுவாடாவை துவக்கி விட்டனர். இரவு 11 மணியில் இருந்து 12 மணிக்குள் பகுதிவாரியாக பண விநியோகம் செய்கின்றனர்'' என்று பிற வேட்பாளர்கள் தரப்பில் புலம்புகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக