சென்னை, ஜூலை.19-
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முகமது அன்சாரியின் மனைவி சம்சுனிஷா ஐகோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
எனது கணவர் முகமது அன்சாரி கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஆயுள் தண்டனை பெற்றுள்ளார். கடந்த 13 ஆண்டு காலமாக அவர் கோவை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது கடந்த 10-ந்தேதி எனது கணவரை சிறைத்துறையினர் திடீரென சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்து விட்டனர்.
நான் மற்றும் குடும்பத்தினர் கோவையில் வசித்து வருகிறோம். என் கணவர் கோவை சிறையில் இருந்த போது வாரத்தில் 2 முறையாவது சந்தித்து பேசி ஆறுதல் தெரிவிப்போம். ஆனால் தற்போது சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டதால் என் கணவரை சந்திப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
என் சகோதரரின் பாதுகாப்பில் நானும் குழந்தைகளும் வசிக்கும் நிலையில் பொருளாதார ரீதியாக சென்னைக்கு சென்று வர வசதி இல்லாத நிலை உள்ளது. என் கணவருக்கு இதய நோய், நீரழிவு நோய் உள்ளதால் நாங்கள் அவரை அடிக்கடி சந்திக்க வேண்டியது அவசியம் ஆகும். எனவே என் கணவரை மீண்டும் கோவை சிறைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
இம்மனு நீதிபதிகள் நாகப்பன் மற்றும் சிவக்குமார் முன்பு இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது.
நன்றி - மாலைமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக