கடந்த 2008-ம் ஆண்டு பெங்களூரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒரு பெண் பலியானார். 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இதையொட்டி பல தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதி என்று சந்தேகப்படும் டி.நசீர் 2 மாதங்களுக்கு முன்பு பிடிபட்டான். அவன் கொடுத்த வாக்கு மூலத்தில், கேரளாவில் செயல்பட்டு வரும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானிக்கும் பெங்களூர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு உண்டு என்று தெரிவித்து இருந்தான்.
இதைத்தொடர்ந்து போலீசார் கடந்த மாதம் கூடுதல் குற்றப்பத்திரிகை ஒன்றை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அதில் மதானி 31-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார்.
இதனடிப்படையில், 17-ந் தேதிக்குள் மதானியை கைது செய்து ஆஜர் படுத்தும்படி பெங்களூர் கோர்ட்டு ஜாமீனில் வரமுடியாத வாரண்டு பிறப்பித்தது. கைது வாரண்டை எடுத்துக்கொண்டு பெங்களூர் போலீசார், கடந்த 8 நாட்களுக்கு முன்பு கேரளாவுக்கு சென்றனர். மதானியின் அனாதை விடுதி உள்ள கொல்லத்தை அடுத்த அன்வராச்சேரி என்ற இடத்தில் அவர்கள் முகாமிட்டு இருந்தனர்.
ஆனால் மதானியை கைது செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. எங்களின் அனுமதி இல்லாமல் கர்நாடக போலீசார் மதானியை கைது செய்ய வந்தது தவறு என்று கேரளா அரசு குற்றம் சாட்டியது. சுதந்திர தினம் வந்ததாலும், ஜனாதிபதி பிரதீபா பட்டீல் கேரளாவில் சுற்றுப்பயணம் செய்ததாலும், மதானியை கைது செய்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்று கேரளா அரசு கருதியது. இதனால், முன்னெச்சரிக்கையாக ஏராளமான போலீசாரை கேரளா அரசு குவித்து இருந்தது. இதனால், மதானியை கைது செய்ய கேரளா ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று கர்நாடக அரசு குற்றம் சாட்டியது.
மதானிக்கு உடல் நலம் சரியில்லை என்று காரணம் காட்டி அவரை கைது செய்ய விடாதபடி அவரது ஆதரவாளர்கள் தடையாக இருந்தனர்.
இதற்கிடையே மதானி பெங்களூர் செசன்சு கோர்ட்டிலும், ஐகோர்ட்டிலும் தன்னை கைது செய்தால் உடனே ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். தன்னை கைது செய்யக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்தார். முன் ஜாமீன் கேட்டும் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த இரு மனுக்களும் நேற்று விசாரணைக்கு வர இருந்தன.
இந்த நிலையில் மதானி கோர்ட்டில் சரண் அடைய திட்டமிட்டு இருந்தார். ஆனால், அவர் கோர்ட்டில் சரண் அடைவதற்குள் கைது செய்துவிடவேண்டும் என்று போலீசார் தயாராக இருந்தனர். இது தொடர்பாக கர்நாடக போலீசாருக்கும், கேரளா போலீசாருக்கும் இடையே நேற்று முன்தினம் ஒரு உடன்பாடும் ஏற்பட்டது. மதானியை கைது செய்ய முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக கேரளா போலீசார் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, கர்நாடக போலீசாரும், கேரளா போலீசாரும் அன்வராச்சேரியில் குவிந்தனர். நேற்று பகல் நேர தொழுகைக்கு பின்னர் மதானி தனது ஆதரவற்றோர் இல்லம் மற்றும் மதரசாவில் இருந்து ஒரு வாகனத்தில் வெளியே வந்தார். அவரது வாகனத்தை கேரளா போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். உடனே கர்நாடக போலீசார் மதானியை கைது செய்தனர்.
அவருடன் அவரது மனைவி சோபியா மற்றும் ஒரு உதவியாளர் உடன் வர அனுமதி அளித்து, அவர்களையும் போலீசார் தங்களது வாகனத்தில் ஏற்றிக்கொண்டனர்.
மதானி கைது செய்யப்பட்டபோது அங்கு திரண்டிருந்த அவரது ஆதரவாளர்கள் போலீசாரை கண்டித்து கோஷம் போட்டனர். மதானி வாழ்க என்றும், மக்கள் ஜனநாயக கட்சி வாழ்க என்றும் குரல் எழுப்பினார்கள்.
அங்கு குழுமி இருந்த பெண்களும், ஆதரவற்றோர் இல்லத்தைச் சேர்ந்தவர்களும் மதானி கைது செய்யப்பட்டபோது கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
மதானி அன்வராச்சேரியில் இருந்து நேராக திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து விமானம் மூலம் பெங்களூர் கொண்டு செல்லப்பட்டார்.
மதானியை கைது செய்வதில் 8 நாட்களாக கேரளா போலீசாரும், கர்நாடக போலீசாரும் ஆடிய கண்ணாமூச்சி ஆட்டம் ஒரு வழியாக நேற்று பகலில் முடிவுக்கு வந்தது.
-- மாலை மலர் இணையதளம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக