குடிசை வீடுகளை மாற்றி காங்கிரீட் வீடு கட்டும் தமிழக அரசின் திட்டத்தின்படி ஒரு வீட்டிற்கு மத்திய அரசு ரூ. 45 ஆயிரம் வழங்குவதாகவும், தமிழக அரசு ரூ.15 ஆயிரம் மட்டும் வழங்கும் நிலையில் அந்த திட்டத்திற்கு கருணாநிதியின் பெயரை வைத்தது நியாயமா என்று காங்கிரசுக் கட்சியின் இளங்கோவன் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். அதாவது எங்கள் காசைப்பயன்படுத்திக் கொண்டு உங்கள்பெயரை மக்களிடம் பிரபலமாக்குவது சரியா என்பதை அவரது கேள்வி.

மேலும் மத்திய அரசின் இந்த திட்டத்திற்கும் தமிழக அரசு செயல்படுத்தும் திட்டத்திற்கும் எந்த சம்பந்தமில்லை என்றும் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் ஏழைகளுக்கு 21 இலட்சம் வீடுகளைக் கட்டும் திட்டம் 2010 ஆம் ஆண்டு முதல் துவங்கப்பட்டிருக்கிறது என்றும் இந்த ஆண்டு மட்டும் மூன்று இலட்சம் வீடுகள் ரூ. 1800 கோடியில் கட்டப்படும் என்றும் கருணாநிதி விளக்கியுள்ளார். இதன்படி மீதமுள்ள 18 இலட்சம் வீடுகளுக்கான நிதி 10,800 கோடி வருகிறது. இந்த தொகையை எப்படி ஒதுக்கப் போகிறார்கள் என்பது ஒருபுறமிருக்க இத்திட்டத்தின்படியே ஒரு வீட்டிற்கு ஒதுக்கப்படும் தொகை ரூ. 60,000 என்றுவருகிறது.
இந்த ரூபாய்க்கு குடிசை வீடு கூட கட்ட முடியாத இன்றைய காலத்தில் காங்கிரீட் வீடு எப்படி கட்ட முடியும்? ஒருவேளை கட்டினாலும் அதன் தரம் எப்படி இருக்கும் என்பது புரிகிறது. இறுதியில் இந்த வீடுகளைக் கட்டும் முகாந்திரத்தில் அதிகாரிகள், கட்சிக்காரர்கள், முதலாளிகளும்தான் சம்பாதிக்கப் போகிறார்கள். மக்கள் நலத் திட்டங்கள் என்ற பெயரில் தி.மு.க அரசு நிகழ்த்தப் போகும் மற்றுமொரு மோசடி. சரி, இது எப்போதும் உள்ள கதைதானே? இனி விசயத்திற்கு வருவோம்.
இந்த விளக்கத்தின் மூலம் கருணாநிதி என்ன சொல்கிறார் என்றால் காங்கிரீட் வீடு கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி பயன்படுத்தப்படவில்லை, முற்றிலும் மாநில அரசு நிதிதான் பயன்படுத்தப்படுகிறது என்பதால் இதற்கு கலைஞர் என்ற பெயர் வைத்ததில் எந்த தவறுமில்லை என்பதே. அதாவது உங்க முதலாளிகளது பணத்தையல்ல, எங்கள் வீட்டுப் பணத்தை பயன்படுத்தும் திட்டத்திற்கு எங்கள் பெயர்தானே வைக்கமுடியும் என்று நியாயம் கேட்கிறார் கருணாநிதி. கூடுதலாக இளங்கோவனது பேச்சு கூட்டணியை வலுப்படுத்தாமல் ‘வலி’ப்படுத்துகிறது என்று வேறு புலம்பியிருக்கிறார்.
இறுதியில் இந்த அக்கப்போரிலிருந்து நாம் பெறும் விளக்கம் என்ன? மத்திய அரசு என்பது நேரு குடும்பத்தின் சொத்து, மாநில அரசு என்பது கலைஞர் குடும்பத்தின் சொத்து. இருவரும் மக்கள் வரிப்பணத்தை வைத்தே அரசின் செலவுகளை செய்கிறார்கள் என்றாலும் ஏதோ அவர்களது சட்டை பாக்கெட்டிலிருந்து செலவு செய்வதாக கருதிக் கொள்கிறார்கள். அதனால்தான் அனைத்து திட்டங்களும் நேரு, இந்திரா, ராஜீவ், கலைஞர் என்ற பெயர்களைத் தாங்கி வருகின்றன.

மக்களும் கூட அப்படித்தான் எண்ணுகிறார்கள் என்பதால் எல்லா ஓட்டுக்கட்சிகளும் இத்தகைய நடைமுறைகளை பச்சையாகக் கையாள்கின்றன. மேலும் மக்கள் வரிப்பணத்திலிருந்தே இவை அமலாக்கப்பட்டாலும் மக்களை ஏதோ பிச்சைக்காரர்கள் போல சித்தரிப்பதும், காங்கிரசு, தி.மு.க கோமான்களை தர்மம் செய்யும் பண்ணையார்களாக காட்டுவதும் மகா மட்டமாக இருக்கிறது.
இந்த திட்டங்கள் எங்கள் பணத்திலிருந்துதான் வருகிறது என்ற உணர்வை மக்கள் பெறாத வரைக்கும் இந்த தர்மவான்களது அயோக்கியப் பெயர்கள் மறையப் போவதில்லை.
-- வினவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக