அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

சனி, 14 ஆகஸ்ட், 2010

காஷ்மீரில் சுயாட்சி மட்டுமே நம்பிக்கையை கட்டமைக்கும் - தேசிய மாநாட்டுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்

புதுடெல்லி அதிகார பீடத்தினால், மீண்டும் மீண்டும் ஏமாற்றப்பட்டு வரும் காஷ்மீரிகளுக்கு தன்னாட்சி வழங்குவது மட்டுமே அவர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க உதவும் என ஜம்மு காஷ்மீரின் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

மேல் சபை உறுப்பினரான குலாம் நபி ரத்தன்பூரி, மேலும் குறிப்பிடுகையில், கலவரங்களால் காயப்படுத்தப்பட்டுள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கு, அம்மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு முகம் கொடுத்தால் மாத்திரமே சகஜ நிலைக்கு திரும்பும் என்றார். 2000 ஆவது ஆண்டில் காஷ்மீர் சட்டசபை பரிந்துரைத்த தன்னாட்சி தீர்மானத்தை டில்லி நிராகரித்தது. அத்தீர்மானத்தை மதித்து நடப்பது ஒன்றே அம்மக்களின் நம்பிக்கையை மீளப்பெறுவதற்கான ஒரே வழியாகும் என்றும் தனது நேர்காணலின் போது குறிப்பிட்டார்.

தன்னாட்சி என்பது மறுக்கப்படும் வரை கோரிக்கைகளும் ஆட்சேபணைகளும் அதிகரிக்கவே செய்யும்.கடந்த இரு மாதங்களாக, பாதுகாப்பு படையினரால் 50 க்கும் அதிகமானோர் சுட்டுக்கொல்லப்பட்டு அமைதி இழந்துள்ள நிலையின் பின்னணியில் ரத்தன்பூரியின் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

1953 இல் அன்றய காஷ்மீர் பிரதமரும், தேசிய முன்னணியின் ஸ்தாபகருமான ஷேக் அப்துல்லாஹ் கைது செய்யப்பட்டதை நினைவு கூர்ந்த ரத்தன்பூரி, அன்றிலிருந்து அவநம்பிக்கையின் வரலாறு தொடங்கியதாக வர்ணிக்கிறார்.அன்றிலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக பல ஒப்பந்தங்கள் மீறப்பட்டன. நாங்கள் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்பட்டோம். என்று இந்திய நிர்ணய சபை அங்கீகரித்த விஷேச சலுகை விலக்கிக் கொள்ளப்பட்டு வருவதை சுட்டிக்காட்டி வருந்தினார்.

உண்மையில் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட விசேட சலுகையான அதிகாரம் 370 இன்படி, ஜம்மு காஷ்மீருக்கான தனி தேர்தல் ஆணையம் இருக்க வேண்டும். உச்ச நீதிமன்றமோ, இந்திய தணிக்கை அதிகாரமோ இங்கு தலையிடக்கூடாது. ஜனாதிபதி ஆட்சி முறை நீட்டிக்கப்படக் கூடாது.பாதுகாப்பு, நாணயம் மற்றும் வெளி விவகார அமைச்சு ஆகிய மூன்று இலாக்காக்கள் மாத்திரமே மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதாகும்.

சர்தாரே ரிஸாயத் என்ற ஜனாதிபதி பதவியும், வஸீரெ ஆஸம் எனும் பிரதமர் பதவியும் 1965 ஆம் ஆண்டு பறிக்கப்பட்டு அவர்கள் முறையே கவர்னர் மற்றும் முதலமைச்சர் என்று மாற்றப்பட்டனர்.அதற்கு பின் வந்த அரசுகள், தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டனர் என ரேடியோ காஷ்மீரின் முன்னாள் அறிவிப்பாளரான ரத்தன்பூரி குறிப்பிட்டார்.

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்த பிரிவினைவாதிகளுடனான மறைமுக பேச்சுவார்த்தையை கடுமையாக சாடியவர், வெளிப்படையான பேச்சுவார்த்தை ஏன் நடத்தப்படக் கூடாது என வினவினார்.பிரச்சனைகளின் ஊடே பிறந்து வளர்ந்துள்ள இளம் தலைமுறையினர் சமஉரிமை மற்றும் சுதந்திரம் என்பதனை மாத்திரமே கருத்தில் கொண்டுள்ளனர். அதனை சரிவர புரிந்து நடப்பதே பிரச்சனைகள் தீர ஒரே வழியாகும் என்று மேலும் அவர் குறிப்பிட்டார்.

Source TCN

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக