அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

இன்னும் சில நாட்களில் கோர்ட்டில் சரண் அடைவேன்: மதானி

கொல்லம், ஆக.16-

2008-ம் ஆண்டு பெங்களூரில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில், மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நசார் மதானி, குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார்.


இந்த வழக்கில் அவரை கைது செய்ய கர்நாடக ஐகோர்ட்டு வாரண்டு பிறப்பித்து இருக்கிறது. அவரது முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.

மதானி தற்போது கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள அன்வராசேரியில் உள்ள அனாதை இல்ல வளாகத்தில் தங்கி இருக்கிறார். அவரை கைது செய்ய கர்நாடக போலீசார் அங்கு சென்று கடந்த 7 நாட்களாக முகாமிட்டு இருக்கிறார்கள்.

கேரள போலீசார் உதவியுடன், மதானியை கைது செய்ய கர்நாடக போலீசார் காத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் மதானியை கைது செய்யும் போது, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கேரள போலீசார் கவனத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கோழிக்கோட்டில் நேற்று சுதந்திர தினவிழாவில் கலந்து கொள்ள வந்த கேரள உள்துறை மந்திரி கொடியேறி பாலகிருஷ்ணனிடம், ``மதானி எப்போது கைது செய்யப்படுவார்?'' என்று நிருபர்கள் கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த அவர், ``மதானியை எப்போது கைது செய்வது? என்பதை கர்நாடக போலீசார்தான் முடிவு செய்ய வேண்டும். இந்த பிரச்சினையில் சட்டம்-ஒழுங்குக்கு பங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டு செயல்படுகிறோம். கேரள போலீசாரின் அனுமதிக்காக, கைது வாரண்டுடன் கர்நாடக போலீசார் காத்திருக்கிறார்கள்'' என்று குறிப்பிட்டார்.

இந்த நிலையில், குன்னத்தூர் தாசில்தார் ஒரு நோட்டீசை, மதானி தங்கி இருக்கும் அனாதை இல்லத்துக்கு அனுப்பி இருக்கிறார். இந்த நோட்டீசில், ``144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், அனாதை இல்ல வளாகத்தில் தங்கி இருக்கும் வெளியாட்களை உடனே வெளியேற்ற வேண்டும்'' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த நோட்டீசு, அனாதை இல்ல வாசலிலும் ஒட்டப்பட்டது.

இதற்கிடையில் திருவனந்தபுரத்தில் முதல்-மந்திரி அச்சுதானந்தனை, பல்வேறு முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்த பிரமுகர்கள் சந்தித்தனர். ``சுப்ரீம் கோர்ட்டில் மதானி முன்ஜாமீன் மனு தாக்கல் செய்து இருப்பதால், அந்த மனு மீதான விசாரணை முடிந்தபின் நடவடிக்கை எடுக்கலாம்'' என்று முஸ்லிம் பிரமுகர்கள் கேட்டுக்கொண்டனர். ஆவன செய்வதாக அச்சுதானந்தன் உறுதி அளித்தார்.

இந்த நிலையில் நேற்று நிருபர்கள் மதானியை தங்கி இருக்கும் இடத்துக்கு சென்று அவரை சந்தித்தனர். அப்போது நிருபர்கள், ``கைது வாரண்டுடன் கர்நாடக போலீசார் இங்கு வந்து காத்திருக்கிறார்களே?'' என்று கேட்டனர்.

அதற்கு பதில் அளித்து மதானி கூறியதாவது:-

``என்னிடம் கைது வாரண்டு இன்னும் கொடுக்கப்படவில்லை. என்னை கைது செய்தால் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட நான் விரும்ப வில்லை. நான் கோர்ட்டை மதிக்கிறேன். இன்னும் சில நாட்களில், அருகில் உள்ள கோர்ட்டில் சரண் அடைவேன். எந்த தேதியில் சரண் அடைவேன் என்பதை 16-ந்தேதி (இன்று) தெரிவிப்பேன்.

எனக்கும் பெங்களூர் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கும் சம்பந்தம் இல்லை. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள டி.நசீருடன் நான் நேரடியாகவோ, டெலிபோனிலோ பேச வில்லை.

எனது உடல் பலவீனமாக இருக்கிறது. என்னை போலீசார் வந்து கைது செய்தால் அதனால் ஏற்படும் சூழ்நிலையை எனது உடல் தாங்காது. எனவே நான் சரண் அடையவே விரும்புகிறேன்.''

இவ்வாறு மதானி கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக