முத்துப்பேட்டையில் அனைத்து தரப்பு கூட்டம் நடத்த வேண்டும்:ஐகோர்ட் உத்தரவு
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த ஜாம்பவான் ஓடையை சேர்ந்த பி.ராமலிங்கம், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில்,
’’பல ஆண்டுகளாக எங்கள் பகுதியில் நாங்கள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தி வருகிறோம். இந்த விநாயகர் சிலை ஊர்வலத்துக்கான ஒருங்கிணைப்பு குழு செயலாளராக நான் செயல்படுகிறேன்.
விநாயகர் சிலை ஊர்வலப்பாதை ஜாம்பவான் ஓடையில் உள்ள விஸ்வநாத சுவாமி கோவிலில் தொடங்குகிறது. பின்னர் முத்துப்பேட்டை, ஓடைகரை, டி.டி.பி.சாலை, ஆசாத் நகர், புதிய பஸ்நிலையம், பழைய பஸ் நிலையம், பி.கே.டி.சாலை ஆகியவற்றின் வழியாக சென்று இறுதியில் பேட்டை சிவன் கோவிலை அடைந்து, அங்குள்ள கோரையாறை சென்றடைகிறது. இந்த சாலையில் கடந்த சில ஆண்டுகளாக ஊர்வலம் சென்று கொண்டிருந்தது.
இந்த நிலையில், 1993-ம் ஆண்டு ஊர்வலத்தின்போது சில சமூக விரோதிகள் கல்வீசி தாக்கினர். எனவே, அதன்பிறகு நாங்கள் போலீஸ் பாதுகாப்புடன் தொடர்ந்து ஊர்வலத்தை நடத்தி வந்தோம். இந்த நிலையில் 2008-ம் ஆண்டு மீண்டும் சில சமூக விரோதிகள் ஊர்வலத்திற்கு இடையூறு ஏற்படுத்தினர்.
அதைத் தொடர்ந்து 2009-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் முகமது சிப்லி பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அப்போது உத்தரவிட்ட ஐகோர்ட்டு, விநாயகர் ஊர்வலத்துக்காக புதிய ஊர்வல பாதையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் புதிய ஊர்வலப் பாதை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஊர்வல பாதையில் அங்காள அம்மாள் கோவில், வெள்ளை விநாயகர் கோவில், காமாட்சி அம்மன் கோவில், பேட்டை சிவன் கோவில் ஆகியவை இடம்பெறவில்லை. ஊர்வலத்தினர் இந்த கோவில்கள் வழியாக செல்ல முடியாது. மேலும், விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு அதிகாரிகள் நிர்ப்பந்திக்கும் பகுதிக்கு செல்ல வேண்டியுள்ளது.
அந்த பகுதி சுடுகாட்டின் அருகே அமைந்துள்ளது. எனவே, நாங்கள் ஏற்கனவே ஊர்வலம் நடத்தி வந்த பழைய ஊர்வல பாதையில் செல்ல எங்களை அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’’என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர்.
பின்னர் நீதிபதிகள், ‘’இது மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பில் வரும் பிரச்சனை ஆகும். அந்த ஊர்வலம் மற்றும் அங்குள்ள சட்டம்-ஒழுங்கு நிலவரத்தை மாவட்ட நிர்வாகம் தான் தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் வருவாய்த்துறையினரும், போலீஸ் அதிகாரிகளும் முடிவு செய்வதுதான் சரியாக இருக்கும். எனவே, மாவட்ட நிர்வாக விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை.விநாயகர் சிலை ஊர்வலப் பாதை தொடர்பாக திருவாரூர் மாவட்ட கலெக்டர் அனைத்து தரப்பினரையும் அழைத்து கூட்டம் நடத்த வேண்டும்.
இந்த கூட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலப் பாதை பற்றி முடிவு செய்யவேண்டும். மொத்தத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்றால், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுடன், கலெக்டர் கலந்து ஆலோசித்து ஊர்வலப் பாதையை பற்றி முடிவு செய்யலாம். அந்த வகையில் ஊர்வலம் நடத்த வேண்டிய தேதி, நேரம் ஆகியவற்றையும் முடிவு செய்யவேண்டும். அனைத்து முடிவுகளும் மக்கள் நலன் கருதி எடுக்கப்பட வேண்டும். அந்த பகுதியில் மத நல்லிணக்கம் ஏற்படும் வகையில் கலெக்டரும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும்’’என்று உத்தரவிட்டனர்.
நக்கீரன் இணையதளம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக