அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

செவ்வாய், 26 அக்டோபர், 2010

திருச்சியில் சோனியா! நாகையில் கருணாநிதி ! மதுரையில் ஜெயலலிதா !
எம் - தமீமுன் அன்சாரி

மதுரையில் நினைத்தை சாதித்துவிட்டார் ஜெயலலிதா! கோவை,திருச்சியை தொடர்ந்து மதுரையில் கடந்த 18 ஆம் தேதி நடத்திய ஆர்ப்பாட்டம் உண்மையிலேயே பிரமிப்பாக இருந்தது.

60 க்கு மேற்பட்ட கேமாராக்கள் மாறி மாறி நிகழ்சிகளை ஜெயா தொலைக்காட்சியில் நேரலையாக காட்டின "பறவை பார்வை" எனக்கூறப்படும் வெகு உயரத்திலிருந்து காட்டப்பட்ட காட்சிகள் உண்மையிலேயே இது பிரம்மாண்ட கூட்டம் தான் என்பதை நிரூபித்தது.

தன்னார்வமும், எழுச்சியும் கொண்ட அக்கூட்டம் தமிழகத்தில் நடைப்பெறப்போகும் தேர்தலில் ஆட்சி மாற்றம் உறுதி என்பதையே பறைசாற்றியது.

ஜெயலலிதா பேசும்பொழுது அநேகமாக தமிழகத்தில் பெரும்பாலான வீடுகளில் ஜெயா தொலைக்கட்சியைதான் மக்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள் எனலாம். சென்னை,கோவை,திருச்சி போன்ற பெருநகரங்களில் மட்டுமின்றி பரவலாக கடைகளில் கூட தொலைக்காட்சியில் ஜெயலலிதாவின் உரையை மக்கள் கவனித்துக்கொண்டிருந்தார்கள். உளவுத்துறையும் இதே குறிப்புகளை தன் மேலிடத்திற்கு அனுப்பி இருக்கக் கூடும்.

ஒரு எதிர்கட்சிக்கு அதுவும் தேர்தல் வரும் நேரத்தில் பல நெருக்கடிகளையும் மீறி கூட்டம் அலை அலையாய் திரள்வது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

சமீபத்தில் திருச்சியில் சோனியாவும்,நாகையில் கருணாநிதியும் கூட்டிய கூட்டத்தை விட பன் மடங்கு எழுச்சியை மதுரையில் கூடிய அதிமுக கூட்டத்தில் காண முடிந்தது.

அதுவும் மதுரையில், அழகிரியின் தொந்தரவுகளையும் கொலைமிரட்டலையும் பல்வேறு பதட்டங்களையும் மீறி கூட்டம் கூடியது கலைஞர் கருணாநிதியின் தூக்கத்தை கெடுத்திருக்கும் (ஸ்டாலின், அழகிரியின் தூக்கத்தையும் சேர்த்து)

கடந்த சில வாரங்களாகவே அவர் நிம்மதியின்றி தவிக்கிறார். அவருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் உண்டான உறவு ஏறத்தாழ நிறைவுகட்டத்திற்கு வந்திருகிறது.

விரைவில் நடைபெறும் மத்திய அமைச்சரவை மாற்றத்தில் அமைச்சர் ராஜா மாற்றப்படுவது பரபரப்பாக பேசப்படுகிறது. இது கருணாநிதிக்கு தனிப்பட்ட ரீதியாக பாதிப்பை ஏறபடுத்தும் என்பதால் அதை எப்படியாவது சரிகட்ட வேண்டும் என தவிக்கிறார்.

அக் 9 அன்று சோனியாகாந்தி திருச்சி பொதுக்கூட்டத்திற்கு செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் இறங்கியபோது, அவரை வழிய சென்று சந்தித்தார் கருணாநிதி.சுய மரியாதையைப் பற்றியெல்லாம் அப்பொழுது நினைத்தது பார்க்கவில்லை.

ஆனாலும் அங்கே சந்திப்பு மன நிறைவோடு நடைபெறவில்லை. மொத்தமே இந்த சந்திப்பு ஐந்து நிமிடங்கள் மட்டுமே நீடித்ததாகவும், சோனியா மிகவும் இறுக்கமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இச்சந்திப்பு ஈழத்தமிழர் நலன் குறித்த கடிதத்தை கொடுப்பதற்காக என திமுக கூறியது.வழக்கமான அரசியல் பேரங்களுக்கு முகமூடி போட்டு அதற்கு ஈழத்தமிழர் போர்வை போர்த்துவது கருணாநிதியின் சமீபகால நடவடிக்கையாக இருக்கின்றது.

அந்த சந்திப்பு மூலம் அன்று இரவு நடைபெறும் காங்கிரஸ் கூட்டத்தில் " கூட்டணி உறுதியாக" இருக்கின்றது. என சோனியா வாயால் கூற வைத்துவிட வேண்டும் எனபதுதான் கருணாநிதியின் தந்திரம்.

ஆனால் அங்கு நிலைமை வேறுமாதிரியாக இருந்தது. ஜி.கே.வாசனும், ப.சிதம்பரமும் காங்கிரஸ் கட்சின் தனித்துவத்தையும், அது யாருக்கும் சளைத்ததல்ல என்று பேசினர்.அப்போதெல்லாம் காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.

அடுத்து பேசிய சோனியா காந்தி ராஜீவ் - மூப்பனார் காலத்தில் இருந்த எழுச்சியை அன்றைய காங்கிரஸ் கூட்டத்துடன் ஒப்பிட்டு பேசியதுடன் நில்லாமல் புதிய சரித்திரத்தின் தொடக்கம் இது என்றும் பேசி, இளங்கோவன் போன்றவர்களை உற்சாகமடைய வைத்தார்.

இதை திமுக சற்றும் எதிர்பார்க்கவில்லை.காங்கிரசுடன் தங்களது தேனிலவு முடிவுக்கு வருவதை உணர்ந்த கருணாநிதி அடுத்த நாள் அக் 10 - அன்று நாகையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கொந்தளித்தார்.

திராவிட இயக்கம் சுயமரியாதை பற்றியெல்லாம் பேசியவர் பதவிக்காக சுயமரியாதையை விட்டுக்கொடுக்கமாட்டோம் என்றார். மேலும் திராவிட இயக்கத்தின் வலிமையை இந்தியா முழுக்க உணர்த்துவோம், என்று அவர் பேசியதுதான் அரசியல் வட்டாரங்களில் கூர்ந்து கவனிக்கப்படுகின்றது.

அதாவது பதவிக்காக அவமானங்களையோ, அச்சுருத்தல்களையோ ஒரு அளவுக்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதையும், காங்கிரஸ் - திமுக உறவு முறிந்தால் நாங்கள் தேசிய அளவில் மூன்றாவது அணி அமைக்கவும் தயங்க மாட்டோம் என்பதையும் தான் திராவிட இயக்கத்தின் வலிமையை இந்தியா முழுக்க காட்டுவோம் என்ற வாசகங்கள் மூலம் கருணாநிதி மிரட்டியிருக்கின்றார் என்று இதற்கு விளக்கமளிக்கப்படுகின்றது.

காங்கிரசுக்கு எதிராக கடந்த காலங்களில் தேசிய முன்னணி, ஐக்கிய முன்னணி என இரண்டு முறை மூன்றாவது அணியை உருவாக்கியவர் கருணாநிதி. இப்போது காங்கிரஸ் உறவு அறுந்தால் மீண்டும் மூன்றாவது அணியை இடது சாரிகள்,தெலுங்கு தேசம்,பீ.ஜூ ஜனதாதளம், மதசார்பற்ற ஜனதாதளம், சமாஜ்வாடி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதாதளம் போன்ற மாநில கட்சிகளை கொண்டு இணைப்பது குறித்து சிந்திக்க கூடும்.

தற்போது தமிழகத்தில் திமுக,காங்கிரஸ் தொண்டர்களுக்கிடையே நெருங்க முடியாத அளவுக்கு இடைவெளி உருவாக்கியிருக்கின்றது.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் காங்கிரஸ் தலைமை தெளிவாக இருக்கின்றது. காரணம் பல்லாயிரம் கோடி ஊழல் பணத்தை தேர்தல் களத்தில் திமுக செலவு செய்து கூட்டணிமூலம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தங்கள் கட்சியை கூட செயழிலக்க வைத்துவிடுவார்கள் என்ற அச்சம் அவர்களுக்கு உள்ளது.

அதனால் தான் ப.சிதம்பரம், இளங்கோவன், வாசன் போன்ற தமிழக காங்கிரஸ் தலைவர்கள் விஜயகாந்த்,பா.ம.க, கொங்குநாடு மக்கள் கட்சி ஆகியவற்றை இணைத்து ஏன் மூன்றாவது அணியை அமைக்கக்கூடாது? என சிந்திப்பதாக பேசப்படுகிறது.

இக்கூட்டணி 30 முதல் 40 வரை வென்றால் தங்கள் ஆதரவு இல்லாமல் திமுகவோ, ஆதிமுகவோ ஆட்சியமைக்க முடியாது என அவர்கள் கணக்கும் போடுகிறார்கள், கேட்காமலையே ஆட்சியில் பங்கேற்ககூடிய சூழல் உருவாகும் என நினைக்கின்றார்கள்.

இப்போது தமிழக அரசியல் களம் சூடு பிடித்து, கணக்குகள் மாறக்கூடிய நிலை உருவாகியிருக்கிறது.

கோவை திருச்சியை தொடர்ந்து மதுரையை ஜெயலலிதா குலுக்கியிருப்பதும்.அங்கே கூட்டணி குறித்து "பாலம் - லாரி - டீசல் - புறா" என ஒரு சிறுகதையை அவர் கூறியிருப்பதும் பலரையும் குழப்பியிருக்கிறது.

எப்படியும் என் கணிப்பு தப்பாது என பேசியிருப்பதன் மூலம் காங்கிரஸ், ஆதிமுக கூட்டணியில் நேரடியாக பங்கேற்பது உறுதி என அதிமுக தரப்பு கூறகிறது.

அதற்கேற்ப சமீபகாலமாக தமிழக காங்கிரசார் திமுகவோடு கருத்து மோதலில் ஈடுபடுவதும், அதிமுக விசயத்தில் அமைதி காப்பதும் பல்வேறு யூகங்களை எழுப்புகிறது.

எது எப்படியிருப்பினும் திமுக ஆட்சி முடிவை நெருங்குவது தெரிகிறது. ஜெயலலிதாவுக்கு வரும் கூட்டங்களும், வீதிகளை மீறிய மக்கள் எழுச்சியும் அதிமுக கூட்டணி வலுவடைந்து வருவதை உறுதிப்படுத்துகிறது.

-- நன்றி மக்கள் உரிமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக