அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

வியாழன், 28 அக்டோபர், 2010

உறக்கம் தொலைத்த சிந்தனை....

அலுவலகத்தில் சிறிது பணி சுமை அதிகமானதால் நேற்று பணி முடித்து திரும்பியதும் அசதியில் (வழக்கத்திற்கு மாறாக) தூங்கிவிட்டேன் - ஆதலால், இரவு தூங்க முடியவில்லை. பெரும்பாலும் நம்மால் மறக்கப்பட்ட, சிலரால் மறக்கடிக்கப்பட்ட மறைந்த கவிஞர், சுயமரியாதை அரசியல்வாதி வலம்புரிஜானின் ஒரு மணிநேர உரை அடங்கிய குறுந்தகடு ஒன்று, அவரின் சொந்த ஊரான திருநெல்வேலிகாரர் (என் நண்பர்) சிலநாட்களுக்கு முன்பு எனக்கு வழங்கி இருந்தார்.

தூக்கமின்மையினால் அவதிப்பட்டேன் என்பார்கள் - அன்று எனக்கு தொக்கம் வராததால் ஞானபாரதி. வலம்புரிஜானின் உரைவீச்சை கேட்கலானேன், ஆனந்தமடைந்தேன் - மனதிற்குள் மழை விழுவதை போல் உணர்ந்து திளைத்தேன். ஆஹா! என்ன பேச்சு? என்ன தமிழ்?

கவிஞர்.வலம்புரிஜான் அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தார். அவருக்கு ஆங்கிலமும், பிரான்சும் நாவிலே நடனம் ஆடும் அளவிற்கு தெரிந்திருந்தாலும், தனது அழகிய தமிழில் - பயன்தரத்தக்க, செழுமையான உரைகளினால் தமிழகத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க செய்தார். இவரின் தமிழ் இவருக்கு கை கொடுத்ததைவிட, இவரால்-இவரின் செழுமையான உரையால் ஆட்சி கட்டிலில் அமர்ந்தவர்கள் அதிகம். இவரால் பயன்பெற்றவர்கள் எல்லாம், அதிக்கார கட்டிலில் அமர்ந்தவர்கள் எல்லாம் அவர் உயிரோடு இருக்கும் போதே மறந்துவிட்டார்கள். அவரது வாழ்நாளின் இறுதி காலங்களில் வறுமை - அவரை வருததெடுத்ததாக அவர் ஊர்கார எனது நண்பர் (வ.ஜாவிடம் நெருங்கி பழகியவர்) சொன்னார்.

தேர்தல் நாயகனாக இருந்து பலரை வெற்றி பெற செய்தவரும், ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஒருவர் தன் வாழ்நாளின் கடைசி நாட்களில் வறுமையில் வாடினார் என்றால் நம்மால் இப்போது நம்பவா முடிகிறது? தற்போதைய அரசியல்வாதிகளில் பலர் தமது அடுத்த ஐந்து தலைமுறைக்கு சொத்து சேர்த்துவிடுவது அல்லாமல், மனைவிக்கு பிறந்தது, துணைவிக்கு பிறந்தது என தன் அனைத்து மக்களையும் அமைச்சர்களாக்கிவிட்டு தான் ஓய்கிறார்கள்.

தனக்கு பொருள் சேர்க்காமல், தன் சந்ததிகளை அரசியல் களத்தில் நிலை நிறுத்திடாமல், தனது இறுதி காளான்களில் வறுமையில் வாழ்ந்தார் என்பதை நினைத்து பார்கையில் இதயம் கனக்கிறது. இதை தான் வாழ்கை சக்கரம் என்பதோ?

என்னதான் சொன்னாலும் ஐபிஎல் லலித் மோடியின் வாழ்கை சக்கரம் இவ்வளவு வேகத்தில் சுழன்றுகொண்டதை தாங்கிகொள்ளவே முடியாது - ஒரு காலத்தில் ஐந்து நாட்களுக்கு ஜவ்வு போன்று இழுத்துக்கொண்டே விளையாடப்பட்ட கிரிக்கெட்டை ஒரு நாள் போட்டி என்ற பெயரில் சுருக்கினார்கள். என்னுடன் வேலை பார்க்கும் சில அமெரிக்க வெள்ளையர்கள் ஒரு நாள் போட்டியையே ஜவ்வு என்பார்கள். "விளையாட்டு என்பது ஒரு பொழுதுபோக்கு! இதை ஒரு நாள் முழுவதும் விளையாடுபவர்களும், அதை நேரிலும், தொலைகாட்சியில் பார்பவர்கள் எல்லாம் வேலை வெட்டி இல்லாதவர்கள்" என கேலிசெய்வார்கள்.

ஒரு நாள் போட்டியையும் சுருக்கி 20 - 20 என்ற பெயரில் விறுவிறுப்பான கிரிகெட்டை அறிமுகப்படுத்தியதன் மூலம் உலகப்புகழ் அடைந்த லலித் மோடி மீது ஊழல் குற்றசாட்டு சுமத்தப்பட்டுள்ளது. லண்டனில் இருக்கும் அவர் எப்போது நாடு திரும்பினாலும் விமான நிலையத்தில் வைத்தே கைது செய்ய அமலாக்க பிரிவினால் உத்தரவிடப்பட்டுள்ளது. அவரை கைது செய்து முறைப்படி விசாரணை நடத்தி - அவர் மீது தவறுருப்பின் சிறையில் அடிப்பார்கள் என்பதில் எனக்கு துளி அளவும் நம்பிக்கை இல்லை.

ஏனெனில், இந்தியாவில் ஒருவர் செய்யும் கொலை எண்ணிக்கையும், கொள்ளையின் மதிப்பும் அதிகமானால், அவரின் தண்டனை குறையும் என்பது தானே நாம் கண்டுவரும் யதார்த்தம்.

கருணாநிதி குடும்பத்திற்கும், மாறன் சகோதரர்களுக்கும் மோதல் இருந்தபோது ராஜாவும், தயாநிதி மாறனும் ஒருவருக்கொருவர் தொலை தொடர்பு துறையில் ஊழல் செய்ததாக/செய்வதாக குற்றம் சாட்டிகொண்டனர். பிரதமர் கூட கேபினெட் அமர்ச்சர்கள் கூட்டத்தில் "சுதந்திர வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மிக பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாக" கடிந்துகொண்டார். இப்போது அந்த பெரிய ஊழல் மக்கள் மனதில் இருந்து மறக்கடிக்கப்பட்டுள்ளது.

காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஏற்பாடுகளிலும் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. இதற்காக அமைக்கப்பட்டுள்ள விசாரை குழு இப்பொது தான் தனது விசாரணையை தொடங்கியுள்ளது. விசாரணையை முடிக்க அந்த குழு எப்படியும் இன்னும் ஒரு பத்து வருடங்களாவது எடுத்து கொள்ளும். இதுவும் வரும்காலங்களில் மக்கள் மனதில் இருந்து மறக்கடிக்கப்படுவதை நாம் காண தான் போகிறோம்.

இந்தியாவில் நடக்கும் குற்றங்களை/ஊழல்களை மதிப்பின் அடிப்படியில் நோக்கினால், எப்படியும் 75% மேல் அரசியல்வாதிகளால் நடத்தப்பட்டதாக இருக்கும். அவை எல்லாம் மக்கள் மனதில் இருந்து மறக்கடிக்கப்பட்டு, தேர்தல் நேரங்களில் கவர்ச்சி அறிவிப்புகள் கொடுத்து மீண்டும் அவர்களே ஆட்சிக்கு வருவது வாடிக்கையாகிவிட்டது. இந்த விஷயத்தில் தமிழகத்தில் எந்த பெரிய கட்சியும், ஒன்றுக்கொன்று குறைந்தது அல்ல.

ஒரு நாட்டின் வளர்ச்சி கரைப்படிந்திராத, நேர்மையான ஆட்சியாளர்களின் கையில் இருக்கிறது என்பதை உணர்ந்து - இந்தியாவின் எதிகாலத்தை கருத்தில் கொண்டு ஊழல்வாதிகளை களையெடுக்கும் பணியை நீதித்துறை செய்யவேண்டும்.

ஆனால் நீதித்துறையின் மீதுள்ள நம்பிக்கையும் நடுநிலையாளர்களுக்கு மத்தியில் குறைந்து வருகிறது. நீதித்துறையின் உயர் பதவிகளில் அமர்திருப்பவர்கள் - நீதியை மறந்து, ஒரு குறிப்பிட்ட சாராருக்கு சாதகமாக நடந்துகொள்வதும், அவர்கள் சொந்த விருப்பு-வெறுப்பு, நம்பிக்கையின் அடிப்படையிலும் செயல்படுவதே காரணம்.

காஞ்சி சங்கரராமன் கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட காமகோடி(?). சங்கராச்சாரியாருக்காக, நீதிமன்ற விடுமுறை நாளான சனிகிழமைகளில் கூடிய நீதிமன்றம் - கால் ஊனமான கேரள அப்துல் நாசர் மதானியை ஏறத்தாள பத்து ஆண்டுகாலம் விசாரைகைதியாகவே சிறையில் அடைத்திருந்ததும், முதியவரான தமுமுக நிறுவனர் குணங்குடி அனீபாவை 13 ஆண்டுகாலாம் விசாரைகைதியாகவே சிறையில் அடைத்திருந்து - இறுதியில் அவர் நிரூபராதி என விடுதலை செய்தார்கள். இவர்கள் இருவருக்கும் பல முறை ஜாமீனும் மறுக்கப்பட்டது.

1948 ஆம் ஆண்டு பதியப்பட்ட பாபரி பள்ளி சம்பந்தமான வழக்கில் எரத்தாழ 60 ஆண்டுகள் கழித்து மூன்று நீதிபதிகள் கொண்ட குழு தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. இத்தீர்ப்பில் மூன்று நீதிபதிகளும் ஒருவருக்கொருவர் பல அம்சங்களில் மாறுபடுகின்றனர். நீதிமன்றம் இந்த வாழ்க்கை ஒரு சொத்துபிரச்ச்னையாக பார்த்திருக்க வேண்டும் என்பது பல மூத்த நீதிபதிகளின் கருத்து. மாறாக, நீதிமன்றம் இந்த வாழ்க்கை நம்பிக்கையின் அடிப்படியில், ஒரு குறிப்பிட்ட சாராரை திருப்திபடுத்த முயலுகிற தீர்ப்பாக வெளிவந்திருக்கிறது.

இனியாவது இந்திய முஸ்லிம்கள் ஒன்றுபட்டு நாடாளுமன்றத்திலும், சட்ட மன்றங்களிலும் தங்களது குரலை ஓங்கி ஒலிக்க செய்ய முயலவேண்டும். வீதி தோறும் பாபரி மஸ்ஜித் சம்பந்தமான கருத்தரங்கங்களும், தெரு முனை பிரச்சாரங்களிலும் ஈடுபட வேண்டும். இவற்றின் மூலம் நடுநிலை இந்துக்களின் ஆதரவை நாம் பெற்றிட பாடுபட வேண்டும்.

செய்வோமா...?

ஆக்கம் - நசுருதீன் முகம்மது

2 கருத்துகள்:

  1. ஐயா உங்கள் செய்தி சிறப்பான வரலாறுகளை எடுத்துறைத்துள்ளது. வலம்புரிஜான் அய்யாவின் தபால்காரன் பற்றிய செய்தி இருந்தால் அனுப்பு வையுங்களேன். நான் புதுச்சேரியை சேர்ந்தவன் ச.கார்த்திகேயன். எனது இ-மெயில் முகவரி: karthikeyan.sa@gmail.com

    பதிலளிநீக்கு
  2. உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும். தேர்தல் ஸ்பெஷல் வலைப்பக்கத்திற்கு தங்களின் இணைய தளத்தில் இணைப்பு கொடுத்தற்கு நன்றி.

    பதிலளிநீக்கு