அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

செவ்வாய், 24 நவம்பர், 2009


பாபர் மசூதி இடிப்பு விசாரணை அறிக்கை ரகசியமாக வெளியானது எப்படி? பாராளுமன்றத்தில் கடும் அமளிபா.ஜனதா எம்.பி.க்கள் கொந்தளிப்பால் இரு அவைகளும் ஒத்திவைப்பு!!

புதுடெல்லி, நவ.24.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இடிக்கப்பட்டது.

விசாரணை அறிக்கை

இதுகுறித்து விசாரிக்க நீதிபதி எம்.எஸ்.லிபரான் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் 17 ஆண்டுகளாக விசாரணை நடத்தி, கடந்த ஜுன் 30-ந் தேதி தனது விசாரணை அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.

இந்த அறிக்கை, 6 மாத காலத்துக்குள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். இதனால் நடப்பு கூட்டத்தொடரில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படுவதாக இருந்தது.
அதற்குள் அறிக்கையில் உள்ளதாக கூறப்படும் சில முக்கிய கருத்துகள், நேற்று ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் வெளியாகிவிட்டது.

அத்வானி குற்றச்சாட்டு

லிபரான் கமிஷன் அறிக்கை வெளியான விவகாரம், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று புயலைக் கிளப்பியது. பாராளுமன்றத்தில் இதுபற்றி விவாதிப்பதற்கு எதிர்க்கட்சி தலைவர் அத்வானி, நோட்டீசு கொடுத்திருந்தார்.

நேற்று பாராளுமன்றம் கூடியவுடன், அத்வானி எழுந்து பேசியதாவது:-

லிபரான் கமிஷன் அறிக்கை விவரங்கள் வெளியானது அதிர்ச்சி அளிக்கிறது. இதை உள்துறை அமைச்சகம்தான் வெளியிட்டுள்ளது. அறிக்கை விவரங்களை தொடராக வெளியிடப்போவதாக ஆங்கிலப் பத்திரிகை கூறியுள்ளது. ஆகவே, அறிக்கையை தாக்கல் செய்வதை ஒரு நாள் கூட தள்ளிப்போட இந்த அரசுக்கு உரிமை இல்லை. இன்றே தாக்கல் செய்ய வேண்டும்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயை லிபரான் கமிஷன் குற்றம் சாட்டி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. என்னை குற்றம் சாட்டி இருந்தால், அதை சவாலாக எடுத்துக்கொண்டிருப்பேன். பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள், எனது வாழ்க்கையில் மிகவும் துயரமான நாள். இருப்பினும் அயோத்தி இயக்கத்தில் எனது பங்கேற்பு குறித்து நான் பெருமைப்படுகிறேன். அயோத்தியில் மிகப்பெரிய அளவில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்.

இவ்வாறு அத்வானி பேசினார்.

முலாயம்சிங்

லிபரான் கமிஷன் அறிக்கை வெளியானது பற்றி உள்துறை மந்திரி விளக்க வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் கேட்டுக்கொண்டார். அறிக்கையை இந்த வார இறுதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பாசுதேவ் ஆச்சார்யா (மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சி), தாராசிங் சவுகான் (பகுஜன் சமாஜ்), அர்ஜ×ன் சரண் சேத்தி (பிஜ× ஜனதாதளம்) ஆகியோரும் லிபரான் கமிஷன் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.

ப.சிதம்பரம் விளக்கம்

உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

லிபரான் கமிஷன் அறிக்கையும், அதுபற்றிய நடவடிக்கை அறிக்கையும் உரிய காலத்துக்குள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். நடப்பு கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்படும் என்று நான் ஏற்கனவே கூறியுள்ளேன். இந்த அறிக்கை வெளியானது குறித்து மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது. பத்திரிகையில் வெளியான கருத்துகள் உண்மையானதா? இல்லையா? என்று நான் கூற விரும்பவில்லை.
ஆனால், லிபரான் கமிஷன் அறிக்கையின் பிரதி ஒன்றுதான் உள்ளது. அதுவும் உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பில் பத்திரமாக உள்ளது. உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த யாரும் பத்திரிகைக்கு தகவல் தெரிவிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒத்திவைப்பு

ப.சிதம்பரத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி, பா.ஜனதா உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று கோஷமிட்டனர். லிபரான் கமிஷன் அறிக்கையை உடனே தாக்கல் செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பினர்.

இந்த கூச்சல்-குழப்பத்தால், சபையை பகல் 12 மணி வரை சபாநாயகர் மீராகுமார் ஒத்திவைத்தார்.

சபை மீண்டும் 12 மணிக்கு கூடியவுடன், பா.ஜனதா உறுப்பினர்கள் மீண்டும் சபையின் மையப்பகுதிக்கு சென்று கோஷமிட்டனர். அவர்களின் கோஷத்துக்கு இடையே, சிவில் பாதுகாப்பு சட்ட மசோதாவை தாக்கல் செய்யுமாறு மத்திய மந்திரி முள்ளபள்ளி ராமச்சந்திரனை சபாநாயகர் கேட்டுக்கொண்டார். அவரும் தாக்கல் செய்தார். அப்போதும் கூச்சல்-குழப்பம் நீடித்ததால், சபையை பிற்பகல் 2 மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார்.

பிற்பகல் 2 மணிக்கு சபை கூடியபோதும், அமளி நீடித்தது. இதனால் சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. பா.ஜனதாவினரின் அமளியில் அக்கட்சி உறுப்பினரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சித்து கலந்து கொள்ளவில்லை.

டெல்லி மேல்-சபை

டெல்லி மேல்-சபை நேற்று கூடியவுடன், கேள்வி நேரத்தை ஒத்தி வைக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி நோட்டீசு கொடுத்திருப்பதாக சபைத்தலைவர் ஹமீது அன்சாரி கூறினார். அதுபற்றி பேச அருண் ஜெட்லிக்கு அனுமதி வழங்கினார். அதன்பிறகு அருண் ஜெட்லி கூறியதாவது:-

அமைச்சகத்தில் உள்ள லிபரான் கமிஷன் அறிக்கை, பத்திரிகையில் வெளியானது, பாராளுமன்றத்தின் கண்ணியத்தை சீர்குலைத்து விட்டது. இது அவை உரிமை மீறல் ஆகும். உள்துறை அமைச்சக வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எனவே, யார் வெளியிட்டது என்பது பற்றி விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சமாஜ்வாடி உறுப்பினர் அமர்சிங்கும், லிபரான் கமிஷன் அறிக்கை வெளியானதற்கு கண்டனம் தெரிவித்தார்.
உள்துறை அமைச்சகத்துக்கு தொடர்பு இல்லை
ஆனால், இதற்கும், உள்துறை அமைச்சகத்துக்கும் தொடர்பு இல்லை என்று மத்திய மந்திரி பிருதிவிராஜ் சவுகான் மறுத்தார். இதுபற்றி உள்துறை மந்திரி ப.சிதம்பரம், பகல் 12 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்வார் என்று சபைத்தலைவர் ஹமீது அன்சாரி கூறினார்.
ஆனால் அதை ஏற்க மறுத்து பா.ஜனதா உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று கோஷமிட்டனர். இதனால் சபை பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

முட்டாள் அல்ல

பகல் 12 மணிக்கு சபை மீண்டும் கூடியபோது ப.சிதம்பரம் விளக்கம் அளித்துப் பேசினார். அவர் பேசியதாவது:-

லிபரான் கமிஷன் அறிக்கையை வெளியிட்டு என்னை நானே சங்கடத்தில் ஆழ்த்திக்கொள்ள நான் முட்டாள் அல்ல. அந்த அறிக்கை 17 தொகுதிகளைக் கொண்டிருக்கிறது. அதை இந்தியிலும் மொழி பெயர்க்க வேண்டி இருப்பதால், அதை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அறிக்கை வெளியானது, அவை உரிமை மீறிய செயல் என்று உறுப்பினர்கள் கூறியுள்ளனர். இதுபற்றி சபையும், சபைத்தலைவரும் எடுக்கும் முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன்

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி பேசியதாவது:-

லிபரான் கமிஷன் அறிக்கையை ப.சிதம்பரம் வெளியிடவில்லை என்பதை நான் நம்புகிறேன். அறிக்கையின் மற்றொரு பிரதி, லிபரான் கமிஷனிடம் உள்ளது. எனவே, லிபரான் கமிஷன்தான் அதை வெளியிட்டிருக்க வேண்டும். இது சீரியசான விவகாரம் என்பதால், இதுபற்றி விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவரது கருத்தை சமாஜ்வாடி உறுப்பினர் அமர்சிங் ஆதரித்தார். பா.ஜனதா உறுப்பினர் வெங்கையா நாயுடு பேசுகையில், `காங்கிரஸ் தலைவர்களைப் பற்றி ஏதாவது கூறியிருந்தால், காங்கிரசார் சும்மா இருப்பார்களா? ஆகவே, அறிக்கையை தாக்கல் செய்யும்வரை, சபையை நடத்தக் கூடாது' என்று கூறினார்.

சீத்தாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு), டி.ராஜா (இந்திய கம்ïனிஸ்டு), மனோகர் ஜோஷி (சிவசேனா), சிவானந்த் திவாரி (ஐக்கிய ஜனதாதளம்), கே.மலைச்சாமி (அ.தி.மு.க.) ஆகியோரும் பேசினர்.
அதைத் தொடர்ந்து, பா.ஜனதாவினரின் அமளி நீடித்ததால், சபை பிற்பகல் 2 மணி வரையும், பிறகு நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

நன்றி : தினதந்தி

posted - muthupet mohaideen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக