அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

பெங்களூர் குண்டுவெடிப்பு: ரகசிய இடத்தில் வைத்து மதானியிடம் விசாரணை

பெங்களூர், ஆக. 19-

பெங்களூரில் 2008-ம் ஆண்டு ஜூலை மாதம் 25-ந்தேதி தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் தொடர்புடைய கேரளாவைச் சேர்ந்த மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானியை பெங்களூர் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர் கொல்லம் நீதிமன்றத்தில் சரண் அடைய காரில் புறப்பட்டபோது போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் விமானம் மூலம் பெங்களூர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு முக்கிய பிரமுகர்கள் அறையில் மதானியை சிறிது நேரம் வைத்திருந்தனர். வெளியே பத்திரிகையாளர்கள் கூட்டம் அதிகம் இருந்ததால் விமான நிலையத்துக்கு சரக்குகள் கொண்டு செல்லப்படும் வழியாக மதானியை காரில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.


மதானியை போலீசார் நேராக பெங்களூர் முதலாவது கூடுதல் மாஜிஸ்திரேட்டு வெங்கடேஷ் உல்கி வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். போலீசார் மாஜிஸ்திரேட்டு வீட்டுக்கு சென்றபோது இரவு 11 மணியாகி விட்டது. மாஜிஸ்திரேட்டு வீட்டின் முதல் மாடியில் இருந்தார். மதானியால் மாடிப்படி ஏற முடியாது என்பதால் காரிலேயே வைத்திருந்தனர்.

இதையடுத்து மாஜிஸ்திரேட்டு கீழே இறங்கி வந்து மதானியிடம் பேசினார். அப்போது போலீஸ் தரப்பில் அவரிடம் மனு அளிக்கப்பட்டது. அதில் மதானியை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டிருந்தது.
இதை மாஜிஸ்திரேட்டு ஏற்றுக்கொண்டு மதானியை வருகிற 26-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தர விட்டார். காவலில் இருக்கும்போது அவர் பிரார்த்தனை செய்ய அனுமதிக்க வேண்டும், தேவையான மருத்துவ வசதிகள் செய்து தர வேண்டும் என்றும் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

அதன் பிறகு மதானியை போலீசார் ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் மதானிக்கு உள்ள தொடர்பு குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே பெங்களூர் கோர்ட்டில் நீதிபதி சுபாஷ் பி ஆடி முன் 57 பக்க மனு ஒன்றை போலீசார் தாக்கல் செய்தனர்.
அதில் மதானியும் 22 குற்றவாளிகளும் சேர்ந்து தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இந்தியாவுக்கு எதிராக புனிதப் போரில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் சீர்குலைத்து பொருளாதார வளர்ச்சியை தடுக்க வேண் டும். இதற்காக மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கலவரத்தை தூண்ட திட்டமிட்டனர்.

இதற்காக சட்ட விரோத மாக வெடிமருந்துகளை வாங்கி குவித்தனர். அவற்றை வெடிகுண்டுகளாக தயாரித்து பொதுமக்கள் நடமாடும் இடங்களில் வைத்துள்ளனர்.

கர்நாடகத்தில் சங்பரிவார் மற்றும் பாரதீய ஜனதா அரசை தங்கள் எதிரியாக பாவித்து இந்த செயலில் ஈடுபட்டனர். குஜராத் கலவரம் மற்றும் பாபர் மசூதி இடிப் புக்கு எதிராக பழி வாங்கும் நடவடிக்கையாக இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தின் தீவிர உறுப்பினர்கள் ஆவார்கள்.

குண்டு வெடிப்பில் கைதாகி இருக்கும் நசீர், அப்துல் ரகீம் ஆகியோர் மதானியை எர்ணாகுளத்தில் சந்தித்து பேச்சுவர்த்தை நடத்தியுள்ளனர். அப்போது தான் பெங்களூரில் குண்டு வைப்பது தொடர்பாக சதி திட்டம் தீட்டப்பட்டது. மதானி அவர்களுக்கு முக்கிய ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.

இந்த குண்டுவெடிப்பில் லஸ்கர்-இ-தொய்பா இயக்க தீவிரவாதிகளுக்கு தொடர்பு உள்ளது. அவர்களுடன் மதானிக்கு உள்ள தொடர்பு பற்றி விசாரிக்க வேண்டி உள்ளது. அவர் பல தடவை வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளார். எனவே மதானியிடம் விசாரணை நடத்த வேண்டியது அவசியமாக உள்ளது.

சராபுதீன், அப்துல் ரகீம் ஆகியோர் வெடிகுண்டுக்கு தேவையான எலெக்ட்ரானிக் கருவிகளை தயார் செய்து கொடுத்துள்ளனர். அவை தான் பெங்களூர் குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக